மதுக்கூரில் 500 எக்டரில் உளுந்து சாகுபடி சிறப்பு திட்டம்: ஆட்சியர் திடீர் ஆய்வு

மதுக்கூரில் 500 எக்டரில் உளுந்து சாகுபடி சிறப்பு திட்டம்: ஆட்சியர் திடீர் ஆய்வு
X

மதுக்கூர் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள உளுந்து சாகுபடியை பார்வையிடும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

மதுக்கூரில் 500 எக்டர் பரப்பில் உளுந்து சாகுபடி சிறப்பு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் தஞ்சை நஞ்சையில் உளுந்து சாகுபடி எனும் சிறப்பு திட்டம் 500 எக்டர் பரப்பில் செயல்படுத்திட இலக்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது மதுக்கூர் வட்டாரத்தில் 70 சதவீத பரப்பில் சம்பா நெல் அறுவடை முடிவுற்ற நிலையில், நஞ்சையில் உளுந்து சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல் சாகுபடி முடிவுற்ற பின் செலவின்றி உளுந்து சாகுபடி மூலம் விவசாயிகள் வருமானம் பெறவும் மண் வளத்தை பெருக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மதுக்கூர் வட்டாரத்தில் இதுவரை 425 எக்டர் வரை நெல்லுக்கு பின் உளுந்து சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் கிராமத்தில் மூர்த்தி மற்றும் முன்னோடி விவசாயிகளுடன் நஞ்சை உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ள 50 எக்டர் பரப்பினை நேரடியாக பார்வையிட்டு உளுந்து சாகுபடி செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கலந்துரையாடினார்.

தற்போது அறுவடை முடிய உள்ளதால் மீதமுள்ள பரப்புகளில் விவசாயிகளை ஊக்குவித்து தரிசு இன்றி உளுந்து சாகுபடி மேற்கொள்ள வேளாண் உதவி அலுவலர்களை கேட்டுக்கொண்டார். நீண்ட காலமாக தரிசாக இருந்து தற்போது நிலத்தை சீர் செய்து உளுந்து சாகுபடிக்கு கொண்டுவந்துள்ள மதுக்கூர் வடக்கு மகேஸ்வரன் வயலில் உளுந்து விதைப்பு பணி ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியரும் விவசாயிகளை உற்சாகப்படுத்தும் பொருட்டு வயலில் உளுந்து விதைத்து சாகுபடி பணியினை துவக்கி வைத்தார்.

ஆய்வின்போது, பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன், வட்டாட்சியர் கணேஸ்வர், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி, வேளாண் அலுவலர் சாந்தி, வேளாண்மை உதவி அலுவலர்கள் பூமிநாதன், கார்த்திக் மற்றும் முருகேஷ் ஆகியோர் கள ஆய்வுக்கான பணிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

அட்மா திட்ட அலுவலர்கள் சுகிர்தா, ராஜு ஐயா மணி , கிருஷ்ணமூர்த்தி, பவித்ரா ஆகியோர் செயல்விளக்கத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!