தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜசோழன் சதய விழா கொண்டாட்டம்:
மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்
மாமன்னர் ராஜராஜசோழன் முடி சூட்டிய நாளை அவர் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று 1038-வது சதய விழா அரசு விழாவாக தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சதய விழா ஆண்டை குறிக்கும் வகையில் மாலையில் 1038 பரத நாட்டிய கலைஞர்களின் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
ராஜராஜ சோழன் பிறந்த சதய நட்சத்திரமான இன்று 2-ம் நாள் விழா தஞ்சை பெரிய கோவிலில் நடைபெற்றது. காலை 6.30 மணிக்கு அரண்மனை தேவஸ்தானம் நிஷாந்தி மற்றும் ஆறுமுகம் குழுவினரின் மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
இதையடுத்து கோவில் பணியாளர்களுக்கு புத்தாடைகளை தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கினார்.
இதையடுத்து பெரிய கோவிலுக்கு வெளியே உள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத், தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து யானை மீது திருமுறை நூல் வைக்கப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க, திருமுறை வீதி உலா பெரிய கோவிலில் இருந்து புறப்பட்டு நகரின் நான்கு ராஜவீதிகளில் வலம் வந்தது.
அடியார்கள், ஓதுவார்கள் திருமுறை பாராயணம் பாடியப்படி திருவீதி உலா வந்தனர். அப்போது பழங்கால கொம்பு உள்ளிட்ட பல்வேறு அரிய இசைக்கருவிகள் இசைக்கப்பட்டன. இதில் பெரியகோவில் உருவம் பொறித்த பிரமாண்ட மாதிரி அரங்கம் வாகனத்தில் வைக்கப்பட்டு வீதி உலாவில் பின்தொடர்ந்து வந்தது.
தொடர்ந்து பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு பால், மஞ்சள், தயிர், தேன், எலுமிச்சை சாறு, இளநீர், சந்தனம் உள்ளிட்ட 48 வகையான பொருட்களால் பேரபிஷேகம் செய்யப்பட்டது. தருமபுரம் ஆதீனம் தலைமையில் நடந்த இந்த அபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். மதியம் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பெருந்தீப வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து மங்கள இசை, நடனம், தேவார இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தன.
சதய விழாவையொட்டி இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் சதய விழாவில் கலந்து கொண்டனர். இதனால் மாநகர் விழாக்கோலம் பூண்டது. பாதுகாப்பு பணியில் ஏராளமான காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu