அனுமதி பெற்ற பின்னரே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும்: கலெக்டர் அறிவிப்பு
தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி தஞ்சாவூர் மாவட்டத்தில், ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் கிராம ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசிடம் அனுமதி பெற்ற பின்னரே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளதாவது : ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் குழுவினர், போட்டி நடத்தப்பட உள்ள தேதிக்கு 20 நாட்கள் முன்பே மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது, ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடம், ஜல்லிக்கட்டு தொடர்பாக கிராம கணக்கு புத்தகத்தில் பதியப்பட்டுள்ள விவரம் ஆகியவற்றை குறிப்பிட்டு ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று குறித்து கூடுதலாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளிலும் 300 மாடுபிடி வீரர்களுக்கு மிகாமலும் மற்றும் பார்வையாளர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை கூடத்தில் கொரோனா தொற்று இல்லை என சான்று பெற்றிருப்பதுடன் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதற்கான (இரண்டு தவணைகளும்) சான்று பெற்றிருக்க வேண்டும். நிகழ்ச்சியில் பங்கேற்கும் காளைகளின் உரிமையாளர், உதவியாளர் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்க வேண்டும். மேலும், அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், முகக்கவசம் அணிவதும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்கனவே அறிவிப்பு செய்யப்பட்ட கிராமம் எனில் ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி பெற்றதற்கான ஆவணங்கள், ஜல்லிக்கட்டு நிகழ்வு அரசின் வழிகாட்டுதலின்படி நடத்தப்படும் என்பதற்கான உத்திரவாதபத்திரம், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின்போது ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் குழுவினரே பொறுப்பு என்பதற்கான உத்திரவாதபத்திரம், மொத்த நிகழ்ச்சியும் காப்பீடு செய்யப்பட்டதற்கான காப்பீடு நகல், தல வரைபடம் ஆகிய விவரங்களை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு நடத்த அறிவிக்கை செய்யப்படாத கிராமம் எனில் இதற்கு முன்னர் ஜல்லிக்கட்டு நடைபெற்றதற்கான ஆதாரம் (புகைப்படஆதாரம், செய்திநறுக்கு / செய்தித்தாள் - ஆதாரம், கல்வெட்டுஆதாரம், கிராம பஞ்சாயத்து தீர்மானம், துண்டுபிரசுரம் போன்றவை) ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்து அரசாணை பெறப்பட்ட பின்னரே ஜல்லிக்கட்டு நடத்த தொடர்புடைய குழுவினருக்கு அனுமதி வழங்கப்படும். அதன் பின்னரே ஜல்லிக்கட்டு தொடர்பான ஏற்பாடுகளை தொடர்புடைய குழுவினர் மேற் கொள்ளவேண்டும்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்குபெறும் காளை உரிமையாளர், ஒரு உதவியாளர் மற்றும் காளை விவரங்களை நிகழ்ச்சிக்கு 7 நாட்களுக்கு முன்பே மாவட்ட நிர்வாகத்திடம் பதிவு செய்து, மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படும் அடையாள அட்டையை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். அடையாள அட்டை இல்லாத நபர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியினை அரசாணை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி எதுவும் பெறாமல் நடத்துபவர்கள் மீது காவல்துறை மூலம் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu