மொய் விருந்துக்கு உடனடி அனுமதி; பேராவூரணி மக்கள் அரசுக்கு கோரிக்கை

மொய் விருந்துக்கு உடனடி அனுமதி; பேராவூரணி மக்கள் அரசுக்கு கோரிக்கை
X

மொய் விருந்து நடத்தப்படும் மண்டபம்.

மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், உடனடியாக மொய் விருந்து நடத்த அனுமதி தர அரசுக்கு பேராவூரணி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சுற்றியுள்ள பகுதிகளில் மொய் விருந்து நிகழ்ச்சி ஒவ்வொரு ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம்.

இதில் பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டு, அதன்படி ஒவ்வொருவரும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் மொய் விருந்து வைக்க வேண்டும். கூட்டு சேர்ந்து மொய் விருந்து நிகழ்ச்சி வைப்பவர்கள் அவரவர்களுக்கு வரக்கூடிய மொய் விருந்து பணத்தின் விகிதாச்சார அடிப்படையில், செலவுத்தொகை பிரித்துக் கொடுக்க படவேண்டும்.

மேலும், ஆண்டுக்கு இவ்வளவு தொகை சேர்த்து மொய்ப் போட வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் விதிக்கப்பட்டு, அதன்படி கோடிக்கணக்கான ரூபாய் மொய் விருந்தில் பணப்பரிமாற்றம் நடைபெற்று வருவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக மொய் விருந்து நிகழ்ச்சி நடைபெறவில்லை. இதனால் கடன் வாங்கி மொய் போட்டவர்கள் தற்போது தங்களது பணத்தை மொய் விருந்து வைத்து வாங்க முடியவில்லை. மேலும் கடன் வாங்கிய தொகைக்கு வட்டியையும் கட்ட முடியவில்லை.

இதனால் இவர்கள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் மொய்விருந்தை நம்பியுள்ள, திருமண மண்டபம் வைத்திருப்பவர்கள், சமையல் பாத்திரம் வாடகைக்கு விடுபவர்கள், பிளக்ஸ் போர்டு தயார் செய்து கொடுப்பவர்கள், மற்றும் பிளக்ஸ் போர்டு வைப்பவர்கள், பத்திரிகை பிரிண்ட் செய்யும் அச்சக உரிமையாளர்கள், தொழிலாளர்கள் என பலதரப்பட்ட மக்களும் தற்போது வருமானம் இல்லாமல் முடங்கி கிடக்கின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை பகுதி மட்டுமல்லாமல், இது போல பேராவூரணி, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, அறந்தாங்கி என கிட்டத்தட்ட இரண்டு, மூன்று மாவட்டங்களில் இந்த மொய் விருந்தை சார்ந்துள்ள வியாபாரம் முடங்கியுள்ளது. இதனால் ஏராளமானோர் மொய் விருந்தில் பணத்தை முடக்கிவிட்டு, கடன் வாங்கிய பணத்திற்கு வட்டி கட்டமுடியாமல் தற்போது கடுமையான கடன் சுமையில் சிக்கித் தவிக்கின்றனர்.

இவர்களின் நிலை கருதி அரசு இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு மொய் விருந்து நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!