92 வயது மூதாட்டி மற்றும் நாய் குட்டிகளை எரித்து கொலை செய்தவர் கைது

போலீஸாரால் கைது செய்யப்பட்ட அஜீத்குமார்
92 வயது மூதாட்டி, வளர்த்த நாய் மற்றும் அதன் குட்டி என மூன்று பேரையும் உயிருடன் எரித்த பேரன் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் பழனிவேல் - தனலெட்சுமி தம்பதி. இவர்களுடைய மகன் அஜித்குமார் (32). அஜித் குமாரின் தந்தை குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற நிலையில், அவரது தாய் தனலட்சுமி மகனை வளர்த்து வந்தார். இந்நிலையில் தனலெட்சுமி சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தனலட்சுமியின் தாய் செல்லம்மாள் தனது பேரனை கூலி வேலைக்கு சென்று வளர்த்து வந்துள்ளார். மேலும் அஜித்குமாருக்கு மதுப்பழக்கம் உள்ளிட்ட போதை பழக்கங்கள் இருந்துள்ளதாகவும், வேலைக்குச் செல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் 92 வயதான மூதாட்டி செல்லம்மாள் கடந்த மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இதனால் வீட்டில் சமையல் செய்வதற்கும், உணவு வழங்குவதற்கும் ஆளில்லாமல் இருவரும் உணவின்றி இருந்துள்ளனர். பேரன் அஜித்குமார் வீட்டில் இருந்த அரிசியை தின்றும், தண்ணீர் குடித்தும் பசியை போக்கினாராம். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக சமையல் செய்யாமல் பாட்டி இருந்ததாலும், அரிசியை மட்டுமே உணவாகத் தின்று வந்த ஆத்திரத்திலும், தனது பாட்டியை வீட்டு வாசலில் வைத்து உயிரோடு தீவைத்து கொளுத்தியுள்ளார். மேலும், வீட்டில் வளர்ந்த நாய் மற்றும் அதன் குட்டி என இரண்டையும் சேர்த்து வீட்டிலுள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு எரித்துள்ளார். இந்நிலையில் அந்த வழியாகச் சென்ற அப்பகுதி மக்கள் செல்லமாள் எரிந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் செல்லமாளின் பிரேதத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அஜீத்குமாரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu