டெல்டா விவசாயிகள் கோரிக்கை..!

டெல்டா விவசாயிகள் கோரிக்கை..!
X

மேட்டூர் அணை திறக்கப்பட்டதை நம்பி, குறுவை சாகுபடியை தொடங்கி விட்டோம். ஆனால் போதிய தண்ணீர் இல்லாததால் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசிடம் இருந்து பெற வேண்டும். குறுவை சாகுபடியை தொடங்கிய விவசாயிகளை காக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்டா விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜூன் 16 ஆம் தேதி தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீர் ஆனது இன்று காலை நிலவரப்படி காவிரியில் 3,000 கன அடியும், வெண்ணாற்றில் 3,000 கன அடியும், கல்லணை கால்வாயில் 500 கன அடியும் தற்போது திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் உழவோட்தல், நாற்றங்கால் தயார் செய்தல் உள்ளிட்ட குறுவை சாகுபடியை தொடங்கிவிட்டனர். தற்போது திறக்கப்படும் தண்ணீரின் அளவை படிப்படியாக உயர்த்தி 10 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சியுடன் சாகுபடி பணிகளை தொடங்கி விறுவிறுப்பாக செய்து வருவதாகவும், ஆனால் 3,000 கன அடி, 500 கனஅடி என தண்ணீர் திறப்பதால், இந்த தண்ணீர் தலைமடை பகுதிக்கே போதுமானதாக இருக்காது. மேலும் கடைமடை சென்றடைய குறைந்தது 15 நாட்களுக்கு மேல் ஆகும். எனவே உடனடியாக 10,000 கனஅடி வரை தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசுடமிருந்து பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மத்திய அரசும் அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும், தண்ணீர் திறக்கப்பட்டதால் மேட்டூரில் தண்ணீரின் அளவு குறைந்து வருவதால், ஜூன் மாதத்திற்கு உரிய 9.19 டிஎம்சி தண்ணீரையும், ஜூலை மாதத்திற்குரிய 31.24 டிஎம்சி தண்ணீரை முழுமையாக பெற்று தர வேண்டும், அப்போதுதான் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும், கடைமடை வரை நீர் பாயும் எனவும் விவசாயிகள் கூறுகின்றனர். மேட்டூர் அணையை திறக்கப்பட்டதால், கடன் வாங்கி சாகுபடியை தொடங்கி விட்டோம், ஆகவே மத்திய, மாநில அரசுகள் டெல்டா விவசாயிகள் கை விடாமல் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags

Next Story