மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளில் அமைச்சர்கள் குழு ஆய்வு
மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை தமிழக முதலமைச்சர் ஆய்வு செய்ய உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் 7 பேர் கொண்ட அமைச்சர் குழு இன்று ஆய்வு செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அண்டமி பகுதியில் சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவில் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி பயிர்களை பார்வையிட்டு, பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் மேலும் அலர் கூறியதாவது: விவசாயிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது. பயிர் காப்பீடு செய்வதற்கான தேதியை நீட்டிப்பது தொடர்பாக மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. இருந்தாலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்குள் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். பாதிக்கப்பட்ட பகுதிகளை நாளை தமிழக முதல்-அமைச்சர் நேரடியாக வந்து ஆய்வு செய்ய உள்ளார், யூரியா மட்டுமின்றி அனைத்து உரத் தட்டுப்பாடு இருந்தாலும் உடனடியாக தட்டுப்பாடு இன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களிலும் கோமாரி நோய்க்கான தடுப்பூசி போடுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது என்றார் அமைச்சர் பெரியசாமி . இந்த ஆய்வில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், எஸ்.ரகுபதி, சக்கரபாணி, சிவ.வீ.மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu