போலீஸ் ஸ்டேஷனில் இருந்து எஸ்கேப் ஆன அதிமுக பிரமுகர்: உதவிய 15 பேர் கைது

அதிமுக பிரமுகர் தப்பியோட உதவிய 15 பேர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஒன்றியத்துக்குட்பட்ட கல்யாண ஓடை கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் (54). இவர் மதுக்கூர் ஒன்றிய அதிமுக செயலாளர் ஆவார். இவரது மனைவி அமுதா மதுக்கூர் ஒன்றிய பெருந்தலைவி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முத்துப்பேட்டை அருகேயுள்ள் கோவிலூர் மணல்மேடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (38) என்வர் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக முத்துப்பேட்டை போலீஸார் கல்யாண ஓடை செந்தில் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக திருவாரூர் மாவட்ட அமமுக இளைஞரணி செயலாளர் ஜெகன் (48) உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த இரண்டாவது குற்றவாளியான மதுக்கூர் ஒன்றிய அதிமுக செயலாளர் கல்யாண ஓடை செந்தில், திருச்சியில் காவல்துறை தலைவர் (ஐஜி) அலுவலகத்தில் நேரில் ஆஜராகி சம்பவத்தன்று தான் ஊரிலேயே இல்லை என விளக்கம் கொடுத்தார். இக்கொலை நடைபெற்றபோது கல்யாண ஓடை செந்தில் சம்பவ இடத்தில் இல்லை. ஆனால் அவர்தான் இதற்கான ஆட்களை ஏற்பாடு செய்துள்ளார் என்பது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. அதேபோல, இவ்வழக்கில் மாட்டிக்கொள்ளாமல் தப்பிப்பதற்காக முன்கூட்டியே திட்டமிட்டு சம்பவத்தன்று அவர் வெளியூர் சென்றதோடு மட்டுமல்லாமல் அதற்கான சாட்சிகளையும் உருவாக்கியுள்ளார் என்பதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, கல்யாண ஓடை செந்திலை கைது செய்யும் நோக்கத்துடன் அவரை நேற்று மதுக்கூர் காவல் நிலையத்திற்கு வரவழைத்து அவரிடம் போலீஸார் விசாரணை செய்து கொண்டிருந்தனர். விசாரணை முடிவில் தான் கைது செய்யப்பட இருப்பதை உணர்ந்த கல்யாண ஓடை செந்தில் உடனடியாக அவரது ஆதரவாளர்களுக்கு போன் செய்து இத்தகவலை கூறியுள்ளார். இதையடுத்து, சிறிது நேரத்தில் அவரது ஆதரவாளர்கள் ஒருவர் பின் ஒருவராக 250-300 பேர் காவல் நிலையத்திற்கு முன் கூடிவிட்டனர். அதோடு, கல்யாண ஓடை செந்திலை விடுவிக்க வேண்டும் எனக்கோரி அவர்கள் கோஷமிட்டனர். மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் டின்களுடன் அங்கே வந்திருந்த ஒருசிலர் தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனால் அங்கே பரபரப்பான சூழ்நிலை உருவானது. அக்கூட்டத்தினரை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர்.
போலீஸாரின் கஸ்டடியில் இருந்த கல்யாண ஓடை செந்தில் இச்சூழ்நிலையை தனக்கு சாதமாகப் பயன்படுத்தி, அக்கூட்டத்தினரிடம் பேசி அவர்களை அமைதிப்படுத்துவதாக போலீஸாரிடம் கூறி காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்துள்ளார். ஆனால், கூட்டத்தினரை அமைதிப்படுத்துவதற்கு பதிலாக, அக்கூட்டதிற்குள் புகுந்து நடுப்பகுதிக்கு சென்று பாதுகாப்பாக நின்று கொண்டார். அதன் பின்னர் அங்கிருந்து அக்கூட்டதினருடன் தப்பிச் சென்றுவிட்டார். அதே நேரத்தில், அவரது குடும்பத்தினரும் வீட்டை பூட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். அவரைத் தேடி கல்யாண ஓடை கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற போலீஸார் அவரது வீடு பூட்டிக்கிடப்பதைக் கண்டு ஏமாற்றமடைந்தனர்.ஒன்றியப் பெருந்தலைவியான அவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டது தெரிய வந்தது.
இச்சம்பவம் தொடர்பாக மதுக்கூர் காவல் நிலைய போலீஸார் கல்யாண ஓடை செந்திலை தப்பிக்க உதவிய குற்றச்சாட்டின்பேரில் 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, இதுவரை 15 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள கல்யாண ஓடை செந்தில் உள்ளிட்ட குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இதுகுறித்து கல்யாடாஒடை செந்தில் கூறுகையில், என்னை காவல்துறையினர் பழிவாங்கும் நோக்கில் விசாரணைக்கு அழைத்தாகவும், ஆனால் என் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை, இதை அறிந்த பொதுமக்கள் தனக்காக காவல்நிலையம் முன்பு திரண்டு, மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பயந்து போன காவல்துறையினர் தன்னை விடுவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu