தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பெருமாள்கோயில் புதுரோடு பகுதியில் இயங்கிவரும் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டை தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு செய்யப்பட்டிருக்கக் கூடிய ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டில் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனோ பாதித்தவர்கள் பயன்படுத்துவதற்காக 4,313 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. தற்போது அதில் 35 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப் பட்டுள்ளது. மீதி 65 சதவீதம் காலியாக உள்ளது. தேவைக்கேற்ப படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும்.
மிக முக்கியமாக ஆக்ஸிசன் இருப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆக்ஸிசனும் போதுமான அளவிற்கு கையிருப்பு உள்ளது.
மாவட்டம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை கண்காணித்து வருகிறோம். மாவட்டத்தில் தினசரி 75 காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது. உள்ளாட்சிதுறை மூலம் கிராமப் பகுதிகள் முழுவதும் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை தஞ்சை மாவட்டத்தில் 1,25,000 பேர் தாமாகவே முன்வந்து விருப்பமுடன் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். தற்போது 10,000 டோஸ் கொரோனா தடுப்பூசி கையிருப்பு உள்ளது.
பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். மேலும் மாவட்டம் முழுவதும் 13 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்த தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்,
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu