பாபநாசம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் மனைவி, மகன் கைது
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மருதாநல்லூர் நந்தவனம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (50). இவர் டைல்ஸ் பதிக்கும் வேலை பார்த்து வந்தார். பாபநாசம் அருகே உத்தாணி மயான சாலையில் அடையாளம் தெரியாத நபர்களால் நாகராஜன் பயங்கரமாக தாக்கப்பட்டு தலையில் காயத்துடனும், கால்களில் பாட்டில்களால் கிரீயும் படுகாயத்துடன் கிடந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு பாபநாசம் துணை சூப்பிரண்டு பூரணி, இன்ஸ்பெக்டர் அழகம்மாள் ஆகியோர் சென்று நாகராஜை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து நாகராஜ் மகன் சிவபாரதி (25) அளித்த புகாரின் பேரில் பாபநாசம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. போலீஸ் விசாரணையில் நாகராஜ் தொடர்ந்து குடித்துவிட்டு தனது மனைவி ரேவதியை (46) அடித்துக் கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரேவதி அரிவாளை எடுத்து நாகராஜை வெட்டியுள்ளார். பின்னர் மகன் சிவபாரதி தனது தந்தை நாகராஜை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று பாபநாசம் அருகே உத்தாணி கிராமத்தில் மயான சாலை பகுதியில் இறக்கிவிட்டு அங்கே தலையில் கல்லை போட்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியது விசாரணையில் தெரியவந்தது.
இதனையொட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ரேவதி, சிவபாரதி ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த நாகராஜ் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார்.
இதுகுறித்து நாகராஜ் உறவினர் மருதாநல்லூரைச் சேர்ந்த பிரம்மானந்தம் (29) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் பொறுப்பு இன்ஸ்பெக்டர் பகவதி சரணம், சப் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் இதனை கொலை வழக்காக மாற்றி நாகராஜின் மனைவி ரேவதியையும் அவரது மகன் சிவபாரதியையும் கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu