கொள்ளிடம் ஆற்றில் குடிக்காடு - ராமநல்லூர் இடையே பாலம் கட்டும் பணி, துவக்கவேண்டும்

கொள்ளிடம் ஆற்றில் குடிக்காடு - ராமநல்லூர் இடையே  பாலம் கட்டும் பணி,  துவக்கவேண்டும்

தஞ்சாவூர் - அரியலூர் மாவட்டங்கள் இடையே கொள்ளிடம் ஆற்றில் குடிக்காடு - ராமநல்லூரில் பாலம் கட்டும் பணியை துவக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே குடிக்காடு - ராமநல்லூர் இடையே பாலம் கட்டும் பணியை துவக்கவேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் அணைக்குடி, செம்மங்குடி,வீரமாங்குடி,தேவன்குடி, பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிக்காடு, கருப்பூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பலருக்கும் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் அதிக அளவில் உறவினர்கள் உள்ளனர். இவர்களது குல தெய்வ கோவில்களும் அரியலூர் மாவட்டத்தில் தான் உள்ளது. இவர்கள் தங்கள் உறவினர் இல்ல விழாக்களுக்கும், கோவில்களில் சாமி கும்பிடவும் திருவையாறு வழியாக திருமானூர் சென்று அங்கிருந்து பஸ் பிடித்து தங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதனால் இந்த பகுதியினர் சுமார் 40 முதல் 50 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதேபோல கொள்ளிடம் ஆற்றின் நடுவில் அமைந்துள்ள தீவு கிராமங்களான கீழராம நல்லூர், மேலராமநல்லூர் கிராமங்களை சேர்ந்தவர்களும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அழகிய மணவாளன், ஏலாக்குறிச்சி,வரப்பன் குறிச்சி, கரையான் குறிச்சி, காமரசவல்லி, மாத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களும் தாங்கள் விளைவித்த மிளகாய் உள்ளிட்ட காய்கறி பயிர்களை கபிஸ்தலம், பாபநாசம்,கும்பகோணம் தஞ்சை உள்ளிட்ட நகரங்களுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

அந்த பகுதியை சேர்ந்த பல மாணவ, மாணவிகள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் கல்வி பயில்கின்றனர். இவர்கள் தினந்தோறும் கொள்ளிடம் ஆற்றில் சுமார் நாலு கிலோ மீட்டர் நடந்து வந்து தஞ்சை மாவட்ட பகுதிக்கு வந்து கொண்டிருந்தனர்.

இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற அரசு அழகிய மணவாளன் - மேல ராம நல்லூர் இடையே சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டியது. அதேபோல தஞ்சை மாவட்டம் குடிக்காடு - மேலராமநல்லூர் இடையே பாலம் கட்ட வேண்டும் என கொள்ளிடம் ஆற்றின் தென்கரையோர மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

இது குறித்து குடிக்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி விஸ்வலிங்கம் கூறியதாவது, தஞ்சை மாவட்டத்தையும்- அரியலூர் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் புதிய பாலம் கட்ட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றோம்.இந் நிலையில் அரியலூர் மாவட்டம் அழகிய மணவாளன் - மேல ராமநல்லூர் இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிய பாலம் கட்டப்பட்டது.

அந்த பாலத்தை இணைக்கும் வகையில் குடிக்காடு - மேல ராம நல்லூர் இடையே பாலம் கட்டுவதற்காக ஆய்வு பணிகள் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு நடைபெற்றது. ஆனால் மேற்கொண்டு புதிய பாலம் கட்டுவதற்கான எந்த பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.

இதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மிகுந்த அவதிபடுகின்றனர். கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் இவர்கள் துயரம் சொல்லி மாளாது.

இந் நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றின் வெள்ளப்பெருக்கின் போது நடந்த படகு விபத்தில் சிக்கி இப் பகுதியை சேர்ந்த 3 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவமும் நடைபெற்றது. எனவே இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று குடிக்காடு - மேலராமநல்லூர் இடையே புதிய பாலம் கட்டுமான பணிகளை உடனே துவக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story