பாபநாசம் அருகே இருதரப்பினர் மோதல்: 2 காவல் உதவி ஆய்வாளர் உள்பட 10 பேர் காயம்
திருவைகாவூர் ஊராட்சியில் மண்ணியாற்றுப் பாலம் அருகே இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மாேதலையடுத்து அப்பகுதியில் அதிரடிப்படை பாேலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பாபநாசம் அருகே உள்ள திருவைகாவூர் ஊராட்சியில் மண்ணியாற்றுப் பாலம் அருகில் ஒரு சமூகத்தினர் இரு தினங்களுக்கு முன்பு கொடிக்கம்பம் வைத்துள்ளனர். இந்த கொடி கம்பத்தை மற்றொரு சமூகத்தினர் அகற்ற வேண்டும் என கூறி வந்தனர். இந்த நிலையில் கொடிக்கம்பத்தை அகற்ற கூறுவதை கண்டித்தும், கொடிக்கம்பம் இருக்கும் இடத்தில் மற்றொரு சமூகத்தினர் பேனர்கள் வைப்பதை கண்டித்தும், திருவைகாவூர் ஊராட்சி மன்னிக்கரையூர், எடக்குடி, நடுபடுகை, உள்ளிட்ட கிராம மக்கள் திருவைகாவூர் மண்ணியாற்றுப் பாலத்தில் அமர்ந்து நேற்று முன்தினம் இரவு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த பாபநாசம் தாசில்தார் மதுசூதனன், பாபநாசம் போலீஸ் டிஎஸ்பி பூரணி, வருவாய் ஆய்வாளர் சுகுணா, கிராம நிர்வாக அலுவலர் சதீஷ், கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, மற்றும் போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இரவு வரை நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் நேற்று பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மதுசூதனன் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்து அதுவரை பொறுமையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டதற்கிணங்க சாலைமறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது .
அதனைத் தொடர்ந்து நேற்று தாசில்தார் மதுசூதனன் தலைமையில் பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் இரண்டு தரப்பினருக்கு இடையே எந்தவித உடன்பாடும் ஏற்படாமல் கலைந்து சென்றனர். இந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் திருவைகாவூர் மண்ணியாற்று பாலத்தில் நின்றுகொண்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது இதனை அறிந்த மற்றொரு சமூகத்தினர் அவர்களும் திருவைகாவூர் மண்ணியாற்று பாலத்திற்கு வருகை தந்து தகாத வார்த்தைகளால் திட்டியதில் இரண்டு தரப்புக்கும் இடையே அடிதடி சண்டையாக மாறியது. கல் மற்றும் கம்பால் அடித்து கொண்டதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மெலட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுணா(37) என்பவருக்கும், கபிஸ்தலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் ( 55) என்பவர்க்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மண்டை உடைந்து. கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இந்த மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த திருவைகாவூர் அண்ணா நகரை சேர்ந்த கலியமூர்த்தி மகன் விஜயராகவன் (16), கலியமூர்த்தி மனைவி தமயந்தி (55), தேவேந்திரன் மகன் தியாகராஜன் (27), அன்பரசன் மனைவி அனுசுயா (36), கௌதமன் மகன் திவாகர் (22) குணசேகரன் மனைவி மாலதி (32), திருவைகாவூர் தெற்கு தெருவை சேர்ந்த சுயம்பிரகாசம் மகன் நடராஜன் (36,) திருவைகாவூர் மெயின் ரோட்டை சேர்ந்த துரைராஜ் மகன் கருணாமூர்த்தி (42),ஆகிய எட்டு பேர்கள் படுகாயமடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து ஆயூதப்படை, அதிரடி படை போலீசார் குவிக்கப்பட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu