நடுரோட்டில் கிடந்த பணக்கட்டுகள்; உடனடியாக மீட்டு போலீசில் ஒப்படைந்த அரசு டிரைவர்
நடுரோட்டிலிருந்து மீட்கப்பட்ட பணக்கட்டுகள்.
தஞ்சாவூர் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பாபநாசம் திருப்பாலத்துறை மெயின் ரோடு பகுதியில் நடுரோட்டில் மதியம் கட்டுக்கட்டாக 500 ரூபாய் சிதறி கிடந்தன. உடனே அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் 500 ரூபாய் நோட்டை பார்த்தவுடன் மக்கள் அதனை எடுக்க முயன்றுள்ளனர்.
உடனே அந்த வழியாக காரில் வந்துகொண்டிருந்த திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் கண்ணன் அந்த பணத்தை மீட்டு, பாபநாசம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாளிடம் அந்த பணக் கட்டுகளை ஒப்படைத்தார். பின்னர் அந்த பணத்தை எண்ணிப்பார்க்கும்போது, ரூ. 3 லட்சத்து 19 ஆயிரத்து 500 இருந்தன. இதனைத்தொடர்ந்து இந்த பணம் யாருடையது என போலீசார் விசாரணை நடத்தினர்.
உடனே கும்பகோணம் கருணைக்கொலை வடக்கு தெருவைச் சேர்ந்த சூர்யா (வயது 20) என்பவர் பதறியடித்துக்கொண்டு காவல் நிலையத்திற்கு வந்து புகார் கொடுத்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், கும்பகோணத்தில் வீட்டு பத்திரத்தை வைத்து ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணத்தை நிதி நிறுவனத்திலிருந்து பெற்றதாக கூறியுள்ளார்.
பின்னர், அந்த பணத்தை ஒரு மஞ்ச பையில் எடுத்துக்கொண்டு கும்பகோணத்தில் இருந்து பாபநாசத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திருப்பாலத்துறை மெயின் ரோட்டில் பணப்பை தவறி விழுந்தது தெரியவந்துள்ளது.
பின்னர் சூர்யா பல இடங்களில் தேடியும் பணம் கிடைக்காததால் பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து இன்ஸ்பெக்டர் அழகம்மாள் புகார் கொடுத்தவருக்கு சொந்தமான பணமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து மேல் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu