இராணுவ சகோதரர்கள் வீட்டில் திருட்டு - 5 பேர் கைது
கைது செய்யப்பட்டவர்கள்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மெலட்டூரில் அருகே உள்ள குண்டூர் கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் கபாலீஸ்வரன், பிரகதீஸ்வரன். இவர்கள் சண்டிகர் மற்றும் அசாம் மாநிலத்தில் ராணுவ வீரர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த மாதம் விடுமுறைக்காக சொந்த கிராமத்திற்கு வந்தனர்.
குண்டூரில் அவர்கள் புதிய வீட்டில் மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மர் பழுதானதால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மின்சாரம் இன்றி தவித்துள்ளனர். சகோதரர்கள் இருவரும் குடும்பத்துடன் பகலில் புதிய வீட்டிலும் இரவில் குண்டர் கிராமத்தில் உள்ள தங்கள் பழைய வீட்டிலும் தங்கி வந்தனர். இந்நிலையில் கடந்த 10-ந் தேதி இரவு இவர்களது வீட்டின் படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் தங்க நகைகள், 200 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.90 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு போனது தெரியவந்தது.
இதனை அடுத்து மெலட்டூர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்ததின் பேரில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன் பேரில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இரயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் மெலட்டூர் அருகே குண்டூர் கிராமத்தில் உள்ள ராணுவ வீரர்கள் வீட்டில் கொள்ளையடித்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை அய்யம்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியைச் சேர்ந்த ராஜா, முருகன், மாரியப்பன், சக்திவேல், சிவா என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர்கள் கொள்ளையடித்த நகையை நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு நகைக் கடையில் விற்பனை செய்தது தெரிய வந்ததையடுத்து அவர்களை அங்கு அழைத்துச் சென்று கொள்ளையடித்த நகைகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து போலீஸார் அவர்கள் 5 பேரையும் தஞ்சாவூர் நீதிமன்றம் 3-வது நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அவர்கள் 5 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu