யார் குரங்கு? தஞ்சை திருமண விழாவில் வி.கே. சசிகலா பரபரப்பு பேச்சு

யார் குரங்கு? தஞ்சை திருமண விழாவில் வி.கே. சசிகலா பரபரப்பு பேச்சு
X

தஞ்சையில் நடந்த திருமண விழாவில் வி.கே. சசிகலா பங்கேற்று பேசினார்.

குரங்கு போல் அ.தி.மு.க.வில் அவசரப்படக்கூடாது என தஞ்சை திருமண விழாவில் சசிகலா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் ஒரு திருமண நிழ்ச்சியை வி.கே.சசிகலா நடத்தி வைத்தார். பின்னர் திருமண விழாவில் பேசிய அவர், கழகத் தொண்டர்களுக்கு நான் கூறுவது ஒன்றே ஒன்றுதான், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எத்தனையோ உண்மையான தொண்டர்களால் உருவான ஒரு இயக்கம். எதிர்க்கட்சியினர் எத்தனை கணக்குகள் போட்டாலும், நான் இருக்கின்ற வரை இந்த இயக்கத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இதை அனைவரும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த இயக்கம் எத்தனையோ, சோதனையான காலகட்டத்தை கடந்து வந்துள்ளது. எம்.ஜி.ஆர். மறைவிற்கு பிறகு ஏற்பட்ட அதே சோதனையான காலம் தற்போது ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு மீண்டும் ஏற்பட்டுள்ளது. அப்போது எவ்வாறு மீண்டு எழுந்து வந்ததோ அதே போன்று தற்பொழுதும் புதுப்பொலிவு பெற்று உன்னத நிலையை அடையும் என்பது ஐயமில்லை.

தொண்டர்கள் இல்லாமல் கட்சியை ஆண்டு விடலாம் என நிர்வாகிகள் நினைக்கலாம். ஆனால் அந்த கடைக்கோடி தொண்டன் நிமிர்ந்தால் தான் கழகம் நிமிரும் என்பதை எந்நாளும் மறக்காதீர்கள். தன்னலமற்ற தொண்டர்கள் நம்மோடு உள்ளவரை நம் கழகம் மீண்டும் அதே மிடுக்கோடு செழிப்போடு தலைநிமிரும் என எல்லோரும் நினைவில் கொள்ளுங்கள். இந்த உன்னத நிலையை அடைய நானே காரணமாக இருப்பேன். அது வரை ஓயமாட்டேன் என்பதையும் இந்த நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். நாம் செல்லும் இடங்களில் எல்லாம், தொண்டர்களும், தமிழக மக்களும் புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித்தலைவியின் பொற்கால ஆட்சி மீண்டும் வராதா, அது எப்போது நிகழும் என்று எதிர்பார்க்கும் இந்த சூழலில் அதனை நிறைவேற்றிக் காட்டுவோம் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். நம் கழகத்தைக் மீண்டும் வலிமையான இயக்கமாக மாற்றிட உகந்த நேரம் வந்துவிட்டது. அனைவரையும் ஒருங்கிணைந்து ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து தன்னிகரில்லா பேரியக்கமாக உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த வேளையில் அனைவரும் ஒரே புள்ளியில் பயணித்து பொறுமை காப்பது நம் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். பொறுமையை கடைபிடித்து கண்டிப்பாக புகழ் வந்து சேரும் என்றார்.

பின்னர் குரங்கு கதை கூறிய சசிகலா, குரங்கு ஒன்று மாங்கொட்டையை மண்ணில் புதைத்தால், இஷ்டம்போல் மாம்பழம் திங்கலாம் என்று எண்ணி மண்ணில் புதைத்து தண்ணீர் ஊற்றியது. ஆனால் தினம், தினம் அந்த மாங்கொட்டையை குரங்கு எடுத்துப் பார்த்தது. இதனால் செடி வளரவே இல்லை, இதனால் வெறுத்துப்போன குரங்கு மாங்கொட்டையை தூக்கி எறிந்து விட்டது. குரங்கின் ஆசை நியாயமானது. ஆனால் அதன் அவசர புத்தி நியாயமற்றது. எனவே நாம் செயல்கள் வெற்றி பெற வேண்டுமென்றால், பொறுமையுடன், தேவையான முயற்சி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!