தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் மூட்டைகள் தேக்கம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் மூட்டைகள் தேக்கம்
X
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளதால், இடப்பற்றாக்குறை காரணமாக நெல் கொள்முதல் செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளதால், இடப்பற்றாக்குறை காரணமாக நெல் கொள்முதல் செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் போதிய பாதுகாப்பு இல்லாததால் தற்போது பெய்யும் மழையில் நெல் மூட்டைகள் சேதமாகும் நிலையில் உள்ளதால் பணியாளர்கள் அச்சமடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடி அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல்லை விற்க ஏதுவாக மாவட்டத்தில் 193 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

கொள்முதல் நிலையங்களில் தினமும் 900 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் ஆன நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்திலிருந்து குடோன்களுக்கு பணி நடைபெறாததால், ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் நெல் மூட்டைகள் நனைந்து, நெல்கள் சேதமாகும் நிலை ஏற்படும் என்பதால் கொள்முதல் பணியாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

குறிப்பாக தஞ்சாவூர் அருகே காட்டூர், வாண்டையார் இருப்பு, சடையார்கோவில், நெய்வாசல், பொன்னாப்பூர் ஆகிய இடங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில், ஒவ்வொரு ஊரிலும் 10 ஆயிரம் மூட்டைகளுக்கு குறையாமல் தேங்கியுள்ளது. மூட்டைகள் இயக்கம் செய்யாததால் நெல்மணிகள் ஆங்காங்கே குவிந்துள்ளது. போதிய இடமில்லாத காரணத்தினால் கொள்முதல் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கொள்முதல் நிலைய பணியாளர்கள் கூறுகையில், ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் ஆயிரக்கணக்கான மூட்டைகள் தேங்கியுள்ளது. கொள்முதல் நிலையங்களில் உள்ள மூட்டைகள் இயக்கம் செய்து வெளிமாவட்டங்களுக்கு அனுப்பாமல், சேமிப்பு கிடங்கில் உள்ள மூட்டைகள் வெளிமாவட்டங்களுக்கு அனுப்ப முன்னுரிமை வழங்குகின்றனர். கொள்முதல் நிலைங்களில் மூட்டைகள் தேங்கியுள்ளதால், போதிய இடமில்லாத காரணத்தால் கொள்முதல் செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம். தற்போது மழையும் பெய்து வருகிறது. நிர்வாகம் மூட்டைகளை பாதுகாக்க படுதாக்களை வழங்கவில்லை. விவசாயிகள் கொண்டு வந்த படுதாக்களை வைத்து பாதுகாக்கிறோம். ஆனாலும் போதவில்லை. இதனால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கொள்முதல் செய்த மூட்டைகளை 48 மணி நேரத்துக்குள் இயக்கம் செய்ய வேண்டும் என்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தஞ்சாவூர் மேலாளார் நத்தர்ஷா கூறுகையில்: நடப்பு கொள்முதல் பருவத்தில் 9.40 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 7.82 லட்சம் மெ.டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்களை சேமிக்க காசவளநாடுகோவிலூரில் 15 ஆயிரம் மெ.டன் இருப்பு வைக்கும் அளவுக்கு, புதிதாக திறந்த வெளி சேமிப்பு கிடங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சேமிப்பு கிடங்குகளில் உள்ள நெல் மூட்டைகள் தனியார் அரவை முகவர்கள், நவீன அரிசி ஆலைகளில் அரவை செய்யப்பட்டு நாள்தோறும் ரயில் மூலம் 1,500 டன் அரிசி வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள மூட்டைகளை கொண்டு வர லாரிகள் அதிகளவில் இயக்கவும், போதியளவு படுதாக்களும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil