போனது கன்று குட்டி, வந்தது கறவை மாடு. தன்னலமற்ற சேவைக்கு கிடைத்த வெகுமதி
தஞ்சாவூரை அடுத்த ஆழிவாய்க்கால் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (52). இவர் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி, தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்று தற்போது கூலி வேலை செய்து வருகிறார்.
இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். மூத்த மகன் பிரசாந்த் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படித்துள்ளார்.
இளைய மகன் சஞ்சய் 12 ம் வகுப்பு படித்துள்ளார். இந்நிலையில் தனது இரண்டாவது மகன் கல்வி செலவுக்காக தனது வீட்டில் ஆசையாக வளர்த்து வந்த கன்று குட்டியை விற்று அதில் வந்த ரூ 6,000 ரூபாயை, கொரனோ நிதியாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவிடம் வழங்கினார்.
இவரின் இந்த செயலை பார்த்து வியந்த மாவட்ட ஆட்சியர் தன் விருப்ப நிதியிலிருந்து மாற்று திறனாளிக்கு உதவிகளை செய்ய உத்தரவிட்டார்.
இதனையடுத்து ஒரத்தநாடு தாசில்தார் சீமான், அவரின் வீட்டிற்கு சென்று சால்வை அணிவித்து பாராட்டி விபரங்களை கேட்டறிந்து எந்த மாதிரியான உதவி வேண்டுமென்று கேட்டார். அதற்கு அவர் தான் பிரதிபலன் பார்க்காமல் இந்த நிதி உதவி செய்ததாக தெரிவித்தார்,
அலுவலர்கள் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கறவை மாடு வாங்கி தாருங்கள் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் ரவிச்சந்திரன் வீட்டிற்கு நேரடியாக சென்று கறவை பசு வாங்க ரூ 50 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.
மாவட்ட ஆட்சியரின் இந்த சேவையை அப்பகுதியினர் பலரும் பாராட்டினர். இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் வேலுமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu