டெல்டா பகுதியில் தண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள்
டெல்டா பகுதியில் தண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள்
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 16ஆம் தேதி கல்லணை திறக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி கல்லணையில் இருந்து காவிரியில் 3,104 கனஅடியும், வெண்ணாற்றில் 3,105 கனஅடியும், கொள்ளிடத்தில் 714 கனஅடியும், கல்லணை கால்வாயில் 1,121 கனஅடியும் வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில் 4,000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டிய கல்லணை கால்வாயில் வெறும் 1,121 கனஅடி மட்டுமே திறக்கப்படுகிறது. இதனால் இன்னும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் முழுமையாக சென்று சேரவில்லை. கல்லணை கால்வாய் பாசனத்தை பொறுத்தவரை தண்ணீர் திறக்கப்பட்டு நான்கு நாட்களில் கடைமடைக்கு சென்றுவிடும், கடைமடைக்கு சென்ற பிறகு தான் தலைமடை பகுதிகளில் உள்ள கிளை வாய்கால்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால் தண்ணீர் திறந்து பத்து நாட்களுக்கு மேல் ஆகியும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாததால், தலைமடை பகுதியில் உள்ள வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறக்கவில்லை.
இந்நிலையில் மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டதை நம்பி குறுவை சாகுபடி பணிகளை தொடங்கிய சடையார் கோயில், வாண்டையார் இருப்பு, காட்டூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் வராததால், அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், நாற்று நடும் பணிகளுக்காக அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றில் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி விளைநிலங்களுக்கு பாய்ச்சி வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இப்பகுதியில் நாங்கள் ஆற்று பாசனத்தை மட்டுமே நம்பி உள்ளோம், மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டு, ஒரு வாரத்திற்குள் விளைநிலங்களுக்கு தண்ணீர் வந்துவிடும், ஆனால் தற்போது தண்ணீர் திறந்து 15 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதுவரை தண்ணீர் வரவில்லை, தண்ணீர் திறக்கப்பட்டதை நம்பி சாகுபடி பணிகளை தொடங்கிவிட்டோம், தண்ணீர்வரும் வரை காத்திருக்க முடியாத காரணத்தினால், அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றில் ஒரு மணி நேரத்திற்கு ரூ150 வரை பணம் கொடுத்து தண்ணீர் வாங்குகிறோம், ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வரை தண்ணீர் பாய்ச்சுகிறோம். ஏற்கனவே விதைநெல், உரம் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தண்ணீரும் காசு கொடுத்து வாங்குவதால் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த நிலை நீடித்தால் போட்ட முதல் கூட எடுக்க முடியாது எனவும் தெரிவிக்கின்றனர். எனவே மேட்டூரில் 20,000 கனஅடியும், கல்லணை கால்வாயில் 4,000 கனஅடி தண்ணீரும் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu