அறுவடைக்கு தயராக இருந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கின: விவசாயிகள் வேதனை

தஞ்சை மாவட்டத்தில், அறுவடைக்கு தயராக இருந்த, பல ஆயிரம் ஏக்கர் நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், இந்தாண்டு குறுவை சாகுபடி 3.5 லட்சம் ஏக்கரில் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 1.66 லட்சம் ஏக்கர் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அறுவடை பணிகள் பாதிக்கபட்டுள்ளது. தொடர்ந்து மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த, சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை உருவாகி உள்ளது.

முறையாக வடிகால் வசதி இல்லாத காரணமாக, ஒக்கநாடு மேலையூர், குலமங்கலம், காட்டூர், வாண்டையார் இருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஆயிரம் ஏக்கர் நெற்கதிர்கள், வயல்களில் சாய்ந்து அழுகி முளைத்து வருகிறது. இந்த ஆண்டு குறுவைக்கு, பயிர் காப்பீடு இல்லாத நிலையில் விவசாயிகள் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர்வாராததே, வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்க காரணம். எனவே வருங்காலத்தில் முறையாக தூர்வார வேண்டும் எனவும், இந்த தண்ணீரை வடிய வைப்பதற்காக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil