ஊரே ஒன்று கூடி நடத்திய பாராட்டு விழா
முப்பத்து மூன்று ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவருக்கு கிராம மக்கள் விழா எடுத்து வழியனுப்பி வைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் வேங்கராயன் குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக டி.விஜயா (58) என்பவர் கடந்த 1988ம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.இவர் தான் பணியில் சேர்ந்த நாள் முதல், பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதில் எவ்வித குறைபாடுகளும் இல்லாமல் பணியாற்றினார். மேலும், கிராமத்தில் உள்ள பெண்களிடம், உடல் நலத்தில் அக்கறை காட்டுவதில் தொடங்கி, எதிர்காலத்தை கட்டமைக்க சிறு சேமிப்பை ஊக்கப்படுத்தி பெண்களை சேமிக்கும் பழக்கத்திற்கு கொண்டு வந்து, தபால் அலுவலகத்தில் அவர்களுக்கு வங்கி கணக்கை துவங்கி அதனை வழி நடத்தினார். மேலும் பெண்கள் சொந்த காலில் நின்று உழைத்து வருமானத்தை பெருக்கும் விதமாக மகளிர் சுய உதவிக்குழுக்களை தொடங்கி அதில் பெண்களுக்கு பல்வேறு பயிற்சிகளையும் வழங்க வழி வகை செய்தார்.
சத்துணவு பணியில் ஈடுபட்டாலும், கிராம மக்களிடம் அன்பாக பழகி, அவர்களில் ஒருவராகி கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் நடைபெற்று வரும் சுக, துக்க நிகழ்வுகளில் தவறாமல் பங்கேற்றுள்ளார்.பணி ஏற்ற நாள் முதல் 33 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி, பல நேரம் வேறு கிராமத்துக்கு பணி மாறுதல் வந்தபோதும், தான் இந்த ஊரிலேயே பணியாற்றுவதாக கூறி தொடர்ந்து பணியாற்றி நேற்று பணி ஓய்வு பெற்றவருக்கு கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.இதற்காக பள்ளி வளாகத்தில் கிராம மக்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பணி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில் கிராம மக்கள் சார்பில் கோலாட்டம், மங்களவாத்தியம் முழங்க, சீர் வரிசை எடுத்து வந்தனர். தொடர்ந்து கிராம மக்கள் சார்பில் அன்பளிப்புகள், பொன்னாடைகள் போர்த்தி சத்துணவு அமைப்பாளரை கவுரவித்தனர். பின்னர் அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சி அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு நெகிழ்வான தருணமாக அமைந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu