மதுக்கூர் வட்டார விவசாயிகள் மண் ஆய்வு செய்ய வேளாண் இயக்குனர் வேண்டுகோள்

மதுக்கூர் வட்டார விவசாயிகள் மண் ஆய்வு செய்ய வேளாண் இயக்குனர் வேண்டுகோள்
X

பாவாஜி கோட்டை கிராமத்தில் மண் மாதிரி எடுத்தல் பற்றி விவசாயிகளுக்கு வேளாண் உதவி அலுவலர் ஜெரால்ட் விளக்கிக் கூறினார்.

மதுக்கூர் வட்டாரத்தில் பயிர் சாகுபடி தொடங்காத நிலையில் விவசாயிகள் மண் மாதிரி எடுத்து மண்ணின் வளத்தையும் நலத்தையும் அறிய வேளாண் உதவி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுக்கூர் வட்டாரத்தில் தற்போது முன்பட்ட குறுவை 412 எக்டரும் உளுந்து சாகுபடி 110 எக்டரும் எள் சாகுபடி 15எக்டரும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜூன் 12 மேட்டூர் அணை திறக்கும் பட்சத்தில் இவ் வருடமும் கடந்த ஆண்டைப் போலவே 1000 எக்டருக்கு நெல் சாகுபடி எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது போர் வைத்துள்ள விவசாயிகள் சாகுபடியினை துவங்கியுள்ள நிலையில் பிற விவசாயிகள் குறுவை எதிர்நோக்கி காத்துள்ளனர்.

சாகுபடி இல்லாத இந்த நிலையில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் மண் ஆய்வு செய்திட வேண்டும். கலைஞர் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் பஞ்சாயத்துக்கு 100 மண் மாதிரிகள் வீதம் கிரிட் மாதிரி முறையில் எடுக்கப்பட உள்ளது.

பிற விவசாயிகளும் மண் மாதிரி எடுத்து தங்கள் மண்ணின் வளத்தை அறிவதன் மூலம் தேவையற்ற உரச் செலவை குறைக்க இயலும். தற்போது விவசாயிகள் இடும் உரங்களின் விலையும் அதிகரித்துள்ள நிலையில் மண் ஆய்வு செய்து ஒவ்வொரு விவசாயியும் தன் வயலில் உள்ள தழை, மணி, சாம்பல் சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களின் அளவை அறிந்து கொள்வதோடு மண்ணின் அமில காரத் தன்மையும் அறிந்து அதற்கேற்ப மண்ணை சரி செய்து கொள்ளவும், தேவைக்கு மட்டும் உரம் இடவும் முடியும். தேவையற்ற உரச் செலவை இதன் மூலம் தவிர்க்கலாம்.

எனவே விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு பத்து இடத்தில் வெட்டி நடுவில் உள்ள மண்ணை அகற்றி விட்டு ஆங்கில எழுத்தான V வடிவத்தில் இரண்டு பக்கங்களில் மட்டும் உள்ள மண்ணை சுரண்டி எடுத்து ஒரு துணிப்பையில் சேகரிக்க வேண்டும். ஏக்கருக்கு பத்து இடத்தில் எடுக்கும்போது ஒரு கிலோ முதல் ஒன்றரை கிலோ வரை மண் மாதிரி கிடைக்க வாய்ப்புள்ளது. ஆய்வகத்துக்கு மண் ஆய்வு செய்ய அரை கிலோ மட்டும் போதுமானது. இதற்கு எடுத்த மண் மாதிரியை நிழல் உள்ள இடத்தில் சம அளவாக வட்டவடிவில் பரப்பி 4 சம பங்காக பிரித்து கொள்ள வேண்டும். பின் கால் பங்கீட்டு முறையில் எதிரெதிர் திசைகளில் உள்ள மண்ணை மாற்றி மாற்றி வெளி தள்ளுவதன் மூலம் அரை கிலோ அளவிற்கு மண் மாதிரி குறைந்துவிடும்.

இதனை ஒரு துணிப் பையில் இட்டு விவசாயி தன்னுடைய பெயர், முகவரி, வயலின் சர்வே எண், வயலின் பெயர், தற்போது பயிரிட்டுள்ள பயிர் ,இனி சாகுபடி செய்ய உள்ள பயிர் ஆகியவற்றை குறிப்பிட்டு அவரவர் பகுதி வேளாண் உதவி அலுவலரிடமா ஒரு மாதிரிக்கு ரூபாய் 20 வீதம் கட்டணம் செலுத்தி வழங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மண் மாதிரி எடுக்கும்போது நிழல் உள்ள இடங்கள் குப்பை கொட்டிய இடங்கள் வரப்பு ஓரங்களில் தவிர்த்து பிற இடங்களில் மட்டும் மண் மாதிரி எடுக்க வேண்டும். தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் மண்வள அட்டை வழங்கும் திட்டத்தில் மண் மாதிரி முடிவுகள் விவசாயிகளின் பெயரில் மண் மாதிரி அட்டைகளாக வழங்கப்படும்.

எனவே விவசாயிகள் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு தங்கள் மண்ணின் வளத்தினை அறிந்து தேவையான அளவு உரமிடும் வகையில் மண் மாதிரி எடுத்து மண்ணின் தரத்தை ஆய்வு செய்து கொள்ள வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டுள்ளார்.

மதுக்கூர் வட்டாரத்தில் தற்போது கலைஞர் திட்ட கிராமங்களில் வேளாண்மை உதவி அலுவலர்கள் அட்மா திட்ட அலுவலர்கள் சிசி பணியாளர்கள் வேளாண் அலுவலர் சாந்தி மற்றும் துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி தலைமையில் முனைப்பு இயக்கங்கள் நடத்தி விவசாயிகளிடம் மண் மாதிரி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மண் மாதிரி குறித்த சந்தேகங்கள் இருப்பின் தங்கள் பகுதி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி விபரம் பெற்றுக் கொள்ளலாம். மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் நுண்ணீர் பாசனம் அமைப்பதற்கு அரசு தற்பொழுது மண் மாதிரி எடுப்பதை அவசியமாக்கி உள்ளதால் விவசாயிகள் வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேளாண் உதவி இயக்குனர் கேட்டுக்கொண்டார்.

இன்றைய தினம் மதுக்கூர் வட்டாரம் பாவாஜி கோட்டை கிராமத்தில் வேளாண் உதவி அலுவலர் ஜெரால்டு இன்சூரன்ஸ் கம்பெனி அலுவலர் மணி மற்றும் சிசி திட்ட பணியாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு வயல்வெளியில் மண் மாதிரி எடுப்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!