தென்னையில் சாறு வடிதல் நோயை கட்டுப்படுத்த மதுக்கூர் வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தல்
ஆலத்தூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மூலம் சாறு வடிதல் நோய் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
மதுக்கூர் வட்டாரத்தில் தென்னை பரவலாக சாகுபடி செய்யப்படும் வாட்டாகுடி, உக்கடை, காசாங்காடு, சிரமேல்குடி, பழவேறிகாடு மற்றும் அத்திவெட்டி போன்ற கிராமங்களில் தென்னந் தோப்புகளில் சாறு வடிதல் நோய் பரவத் துவங்கியுள்ளது.
இது தஞ்சாவூர் வாடல் நோய் இல்லை. தீயலவியாப்சிஸ் எனும் கிருமியினால் இந்நோயானது ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட மரங்களில் நீள்வெட்டு வெடிப்புகளில் மற்றும் காயங்களிலிருந்து கருஞ்சிவப்பு நிற சாறு சில அடி தூரத்துக்கு வடியும். இந்த சாறானது காய்ந்து கருப்பு நிறமாகி விடும். மரத்தின் பட்டைகள் மீது மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறத்தில் புள்ளிகள் போல தெரியும் இதற்கு காரணம் அந்த மரப் பட்டையில் உள்ள திசுக்கள் அழுகி முதலில் மஞ்சள் நிறமாகி பின்னர் கருப்பாகிவிடும்.
சரியான நேரத்தில் இதனை கட்டுப்படுத்தாவிட்டால் நோய் முற்றி மரத்தின் உட்பகுதிகளில் அழுகி குழாய் போல மாறிவிடும். இவ்வாறு உட்புறத் தண்டு பாதிப்படைவதால் வெளிச்சுற்று ஓலைகள் மஞ்சள் நிறமாகி காய்ந்து முற்றுவதற்கு முன் உதிர்ந்துவிடும். குலைகளும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
தென்னை விவசாயிகள் முக்கியமாக கவனிக்க வேண்டியது, தென்னையில் தண்டு பகுதியில் காயம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். மரம் ஒன்றுக்கு ஆண்டுக்கு 50 கிலோ தொழு உரத்துடன் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து மரத்துக்கு 200 கிராம் டிரைகோடெர்மா விரிடி கலந்து இட வேண்டும். டிரைக்கோடெர்மா விரிடி தேவையான அளவு வேளாண் விரிவாக்க மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
சாறு வடிதல் நோய் தென்படும் தோப்புகளில் வெயில் காலத்தில் தேவையான அளவு நீர் பாசன வசதியும், மழைக்காலத்தில் சரியான வடிகால் வசதியும் அவசியம் தேவை. சாறு வடிதல் நோயின் பாதிப்பானது தரையில் இருந்து இரண்டு அல்லது மூன்று அடி தூரம் வரை அதிக அளவில் காணப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளை செதுக்கி அதன்மீது கேலிக்ஸின் அல்லது ஒரு சத போர்டோ கலவையை தடவலாம். மருந்து தடவிய இரண்டு நாட்களுக்கு பின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தாரை ஊற்றுவதன் மூலம் மேலும் பரவுவதை தடுக்கலாம். பாதிக்கப்பட்ட பகுதிகளை எரித்து விட வேண்டும். கேலிக்ஸின் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் 50 மிலி வீதம் கலந்து வருடத்துக்கு மூன்று முறை வேர் மூலம் மரத்துக்கு 15 லிருந்து 20 மிலி வீதம் செலுத்தி அழுகல் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தலாம்.
வேர் மூலம் மருந்தினை செலுத்துவதற்கு 100 மில்லி பாலிதீன் பாக்கெட்டில் மருந்தினை ஊற்றி ரோஸ் கலரில் இருக்கும் பென்சில் தடிமன் உள்ள இளம் வேரில் காற்று புகாமல் இறுக்க கட்டி விட வேண்டும். இதன்மூலம் மருந்தானது எளிதாக மரத்தினால் எடுத்துக்கொள்ளப்படும். மேலும் சந்தேகம் ஏற்படின் தங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலர் அல்லது வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தினை அணுகுமாறு வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu