தற்சார்பு விவசாயத்துக்கு மாறுவோம்; தவறான மருந்தை தவிர்ப்போம்: வேளாண் உதவி இயக்குனர்
மஹாதேவபுரம் கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் மூலம் நடைபெற்ற விவசாயிகளுக்கான நெல் வயல்வெளிப் பள்ளி பயிற்சி.
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அடுத்த மஹாதேவபுரம் கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கான நெல் வயல்வெளிப் பள்ளி பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியில் இக்கிராமத்தை சேர்ந்த 30 விவசாயிகளை தேர்வு செய்து, நெல் விதை முதல் அறுவடை வரை அனைத்து தொழில்நுட்பங்களும் களத்தில் நேரடியாக பயிற்சி அளிக்கப்பட்டது. 6 வகுப்புகளாக நடத்தப்படும் இப்பயிற்சியில், மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி, துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி, உதவி வேளாண்மை அலுவலர் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் மண் வளம், காலத்தில் நெல் விதையை விதைப்பதன் முக்கியத்துவம், நாற்றங்கால் தொழில்நுட்பம், மேலாக நடவு செய்வதால் கிளைகள் அதிகமாக வெடித்து அதிக நெல்மணி உற்பத்தி செய்வது பற்றியும் தேவைக்கேற்ப உரம் இடுவது பற்றியும் உரமிடும் நேரம் பற்றியும் எடுத்துரைத்தனர்.
மேலும், நெல்லில் நீர் நிர்வாகம் பற்றியும் வெள்ளம் போல் நீர் பாய்ச்சுவதை தவிர்த்து காய்ச்சலும் பாய்ச்சலும் மாய் நீர் பாசனம் செய்வதால் நெல்லில் வேர்கள் எவ்வாறு இயல்பாக காற்றோட்டத்துடன் இருந்து அதிக மகசூலுக்கு உதவுகிறது என்பது பற்றியும் களை நிர்வாகம் பற்றியும் விவசாயிகளுடன் கலந்துரையாடி குழுக்களாக பிரித்து தெளிவாக எடுத்துரைத்தார் .
நெல்லில் நன்மை செய்யும் பூச்சிகளான சிலந்தி, பொறிவண்டு, நீர் தாண்டி, தட்டான் நீர் மிதப்போன், குளவி போன்றவைகள் எவ்வாறு தீமை செய்யும் பூச்சிகளை உண்டு விவசாயிகளுக்கு நன்மை செய்கின்றன என்பதை மிகத் தெளிவாக வயல்வெளியில் நேரடியாக விளக்கியது விவசாயிகளை மிகுந்த மகிழ்ச்சியுற செய்தது.
மதுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி வித்யாசாகர், இயற்கை உரங்கள் தயாரிப்பது, மீன் அமினோ அமிலம், ஜீவாமிர்தம், டீகம்போஸர் உபயோகம் போன்றவைகள் பற்றி விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்து எப்பொழுது, எவ்வளவு எப்படி பயன்படுத்துவது, என்பதுவரை எடுத்துக்கூறினார்.
பின்னர் வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி, துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி வேளாண் உதவி அலுவலர்கள் சுரேஷ் முன்னோடி இயற்கை விவசாயி வித்யாசாகர் ஆகியோரின் வழிகாட்டுதலோடு விவசாயிகளுடன் வயலில் இறங்கி நன்மை செய்யும் தீமை செய்யும் பூச்சிகளை நேரடியாக தெரிந்து கொண்டதோடு பொறி வண்டு சிலந்தி ஆகியவற்றின் செயல்பாடுகளையும் விவசாயிகள் கண்டு தெளிவு பெற்றனர்.
வயல்வெளி பயிற்சிக்கு பின்னர் களத்தில் நேரடியாக முன்னோடி இயற்கை விவசாயி வித்யாசாகர் பயிற்சியில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு ஜீவாமிர்தம் மற்றும் மீன் அமினோ அமிலம் தயாரிப்பது குறித்து செயல் விளக்கமாக செய்து காட்டினார்.
இதன்மூலம் விவசாயிகள் யூரியா சூப்பர் பொட்டாஷ் டி.ஏ.பி. போன்ற உரங்களை அதிக விலை கொடுத்து வெளியில் வாங்குவதை தவிர்த்து தற்சார்பான முறையில் தங்கள் பயிருக்கு தாமே குறைந்த செலவில் இயற்கை உரம் தயாரித்துக்கொள்ள முடியும் என்பதை விவசாயிகளுக்கு வலியுறுத்தப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu