சிகரெட் சாம்பல் கண்ணில் விழுந்த விவகாரம்: இரு தரப்பு மோதலில் வாலிபர் அடித்துக்கொலை
கும்பகோணம் அருகே இருதரப்புக்கு இடையே வாய்த்தகராறில் அடித்துக்கொல்லப்பட்ட வாலிபர்.
கும்பகோணம் அருகே கொட்டையூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (22). இவர், தனது நண்பர் சந்தோஷ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வளையப்பேட்டை வழியாக சென்று கொண்டிருந்தார்.அப்போது இவர்களுக்கு முன்னால் சிகரெட்டை புகைத்தபடி ஒருவர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரது சிகரெட்டின் சாம்பல், பின்னால் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பிரகாஷ் நண்பர் சந்தோஷ் கண்ணில் பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் மற்றும் சந்தோஷ் இருவரும் முன்புறத்தில் சென்று கொண்டிருந்த நபரை வழிமறித்து நிறுத்தி தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது. அப்போது பிரகாஷ் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரும் சேர்ந்து புகை பிடித்த நபரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, அடிவாங்கிய நபர் செல்போன் மூலம் தனது நண்பர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த புகைபிடித்த நபரின் நண்பர்கள் அங்கு வந்து பிரகாஷ் மற்றும் சந்தோஷை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து கும்பகோணம் தாலுக்கா காவல்நிலையத்தில் சந்தோஷ் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புகைப்பிடித்து சென்ற அந்த நபர் யார்? பிரகாஷ் மற்றும் சந்தோஷை தாக்கியவர்கள் யார்? இந்த சம்பவத்தில் யாரெல்லாம் ஈடுபட்டுள்ளனர்? ஆகிய கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிகரெட் சாம்பல் கண்ணில் பட்டதை தட்டிக்கேட்டதற்காக வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu