நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தஞ்சை மாவட்டத்தில் 2,038 பேர் களத்தில் உள்ளனர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தஞ்சை மாவட்டத்தில் 2,038 பேர் களத்தில் உள்ளனர்
தஞ்சை மாவட்டத்தில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் 2,038 பேர் களத்தில் உள்ளனர்

தஞ்சை மாவட்டத்தில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் 2,038 பேர் களத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் 457 வார்டுகளில் 2,038 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதன் விவரம் வருமாறு

கும்பகோணம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் 445 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் வேட்பு மனு பரிசீலனையின் போது பல்வேறு காரணங்களால் 57 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 113 பேர் தங்களது மனுக்களை திரும்ப பெற்றுக் கொண்டனர். தற்போது 48 வார்டுகளிலும் மொத்தம் 275 பேர் போட்டியிடுகின்றனர்.

பட்டுக்கோட்டை நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் 189 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில் 1 மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், நேற்று 54 பேர் தங்களது மனுக்களை திரும்ப பெற்றனர். தற்போது 134 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில், 172 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். இதில் 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், நேற்று 49 பேர் தங்களது மனுக்களை திரும்ப பெற்றனர். இதையடுத்து தற்போது 121 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

தஞ்சை மாநகராட்சி

தஞ்சை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 51 வார்டுகளில் 391 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதில் 14 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து 95 பேர் தங்களது மனுக்களை திரும்ப பெற்றுக் கொண்ட நிலையில், மீதமுள்ள 282 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

20 பேரூராட்சிகளில் 300 வார்டுகள் உள்ளன. இதில் போட்டியிட 1,670 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் 42 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 400 பேர் வாபஸ் வாங்கினர். 2 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தற்போது 1,226 பேர் களத்தில் உள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 459 வார்டுகளில் போட்டியிட 2,867 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் 116 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 711 பேர் வாபஸ் பெற்றனர். 2 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தற்போது 457 வார்டுகளில் 2,038 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story