கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: சுவாமிமலையில் வணிகர்கள் கடையடைப்பு
கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைப்பதை எதிர்த்து சுவாமிமலையில் போராட்டத்தில் ஈடுபட்ட வர்த்தகர்கள்
கும்பகோணம் மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து சுவாமிமலையில் வர்த்தகர்கள் கடையடைப்பு மற்றும் சோழன்மாளிகையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
.கும்பகோணம் மாநகராட்சியோடு சுவாமிமலை பேரூராட்சி, சோழன்மாளிகை ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து சுவாமிமலையில் வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டத்திலும், சோழன்மாளிகை ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த 24-ம் தேதி, கும்பகோணம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியானது. இந்த மாநகராட்சியோடு அருகே உள்ள சுவாமிமலை, தாராசுரம், திருநாகேஸ்வரம் ஆகிய பேருராட்சிகளும், பெருமாண்டி, உள்ளூர், அம்மாச்சத்திரம், சாக்கோட்டை, சோழன்மாளிகை, தேப்பெருமாநல்லூர், பழவாத்தான்கட்டளை, உமாமகேஸ்வரபுரம், வலையப்பேட்டை, திருவலஞ்சுழி, கொரநாட்டு, கருப்பூர், அண்ணலக்ரஹாலம், பாபுராஜபுரம், அசூர் ஆகிய ஊராட்சிகளும் இணைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், சுவாமிமலை பேரூராட்சியை கும்பகோணம் மாநகராட்சியோடு இணைக்க கூடாது என சுவாமிமலை பொதுமக்களும், வர்த்தகர்களும் தமிழக அரசின் கவனத்துக்கு தங்களது கோரிக்கைகளை கொண்டு செல்லும் வகையில் சுவாமிமலையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையொட்டி, நேற்று சுவாமிமலை கடைவீதியில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் பேரூர் தலைவர் ஏ.பகவன்தாஸ், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் கோ.வி.கல்யாணகுமார், வர்த்தக சங்கத் தலைவர் என்.சிவக்குமார், அமமுக நகர செயலாளர் பா.செந்தில்வேலன், தேமுதிக நகர செயலாளர் ராஜேஸ்கண்ணா, பாஜக கலை பண்பாட்டு துறை மாவட்ட செயலாள் ஆர்.ஏகநாதன், பாமக நகர செயலாளர் எஸ்.சங்கர், எஸ்டிபிஐ ஒன்றிய செயலாளர் பக்ரூதீன், தமிழ்த் தேசியப் பேரியக்க கிளைச் செயலாளர் க.தீந்தமிழன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சோழன்மாளிகையில் முற்றுகை போராட்டம்: இதே போல், கும்பகோணம் அருகே உள்ள சோழன்மாளிகை ஊராட்சியை கும்பகோணம் மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள், ஊராட்சி மன்ற அலுவலகத்தினையும், ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயக்குமாரையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, மாநகராட்சியோடு சோழன்மாளிகை கிராமம் இணைக்கப்பட்டால் 100 நாள் வேலை பறிபோகும், கிராமப்புறமாக உள்ள இப்பகுதியில் உள்ள விளைநிலங்களை அனைத்தும், வீட்டுமனைகளாக மாறினால் விவசாயப்பணிகள் பாதிக்கப்படும் எனக்கூறி முழக்கங்களை எழுப்பினர். சுமார் 1 மணி நேரம் பொதுமக்கள் நடத்திய முற்றுகை போராட்டத்தின் போது, ஊராட்சி மன்றத் தலைவர் பி.ஜெயக்குமார், அவர்களை சமாதானம் செய்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
=
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu