கும்பகோணம் அருகே தாராசுரத்தில் ரயில் மோதி சிறுவன் உயிரிழப்பு

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் ரயில் மோதி சிறுவன் உயிரிழப்பு
X

உயிரிழந்த சிறுவன் திலிப்குமார்.

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் ரயில் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அருகே தாராசுரம் மிசின் தெருவைச் சேர்ந்தவர் அருமதுரை. இவரது மகன் திலிப்குமார் (14). கும்பகோணத்தில் உள்ள அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் உள்ள மாடுகளை மேய்த்து வந்தான்.

இந்நிலையில் தாராசுரம் ரயில்வே கேட் பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு மாடு ரயில்வே தண்டவாளம் பகுதிக்கு சென்றது. அப்போது மயிலாடுதுறையிலிருந்து கோவை நோக்கி ஜனசதாப்தி விரைவு ரயில் சென்றதால், மாடு அடிபட்டு இறந்து விடும் என பதறிய சிறுவன் மாட்டை அங்கிருந்த விரட்ட ரயில் தண்டவாளத்துக்கு ஓடியபோது, ரயில் மோதியதில் சிறுவன் அதே இடத்தில் உயிரிழந்தான். ஆனால் மாடு ரயில் வருவதை பார்த்து அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டது.

சிறுவன் ரயில் மோதி இறந்த தகவல் கும்பகோணம் ரயில்வே புறக்காவல் நிலைய போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உதவி ஆய்வாளர் சிவராமன் மற்றும் போலீஸார் சிறுவனின் சடலத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ரயில்வே புறக்காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!