மயிலாடுதுறை அருகே சிலை திருட்டு வழக்கில் கோயில் குருக்கள் கைது

மயிலாடுதுறை அருகே சிலை  திருட்டு வழக்கில் கோயில் குருக்கள் கைது
X

கைது செய்யப்பட்ட குருக்கள் சூரியமூர்த்தி.

மயிலாடுதுறை அருகே சுவாமி சிலைகள் திருட்டு தொடர்பாக கோயில் குருக்கள் கைது செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள நெம்மேலி கிராமத்தை சேர்ந்த குருக்கள் சூரியமூர்த்தி (75) என்பவரிடம் சில உலோக சிலைகள் மற்றும் வெள்ளிக் கவசங்கள் இருப்பதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையொட்டி ஏ.டி.ஜி.பி. ஜெயந்த் முரளி மற்றும் ஐ.ஜி. தினகரன் ஆகியோரின் உத்தரவின்படி, புலன் விசாரணை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி. ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினரால் நேற்று முன்தினம் சீர்காழி அருகிலுள்ள நெம்மேலி கிராமத்தை சேர்ந்த குருக்கள் சூரியமூர்த்தியை பிடித்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.


நெம்மேலி கிராமத்தில் உள்ள விஸ்வநாதசுவாமி திருக்கோவிலில் கருவறையில் விசாலாட்சி அம்மன் சிலைக்கு பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த 32 செ.மீ உயரம் கொண்ட பிரதோஷ நாயகர், 30 செ.மீ உயரம் கொண்ட பிரதோஷ நாயகி சிலை இந்து சமய அறநிலையத்துறையின் உரிய அனுமதி இல்லாமல் அவர் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 காத்தாயி அம்மன், 1 சனீஸ்வரன் வெள்ளி கவசங்களையும், 2 சிறிய வெள்ளி குத்து விளக்கு, 1 சிறிய வெள்ளி குடம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


இவை எந்த கோவிலில் இருந்து களவாடப்பட்டது என்பது குறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிலை திருட்டு தடுப்பு போலீசார் குருக்கள் சூரியமூர்த்தியை கைது செய்து கும்பகோணம் கூடுதல் குற்றவியல் தலைமை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் கைப்பற்றப்பட்ட சிலைகளையும், வெள்ளி கவசங்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
ai solutions for small business