ரூ.1 கோடி மதிப்புடைய சுவாமி விக்கிரகங்கள் மீட்பு: 7 பேர் கைது
மீட்கப்பட்ட சுவாமி சிலைகள்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு கூடுதல் ஐஜி ஜெயந்த்முரளி உத்தரவுப்படி, சிலை திருட்டு தடுப்பு பிரிவு டிஐஜி தினகரன் வழிகாட்டலுடன், கூடுதல் துணை கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் ஆய்வாளர் இந்திரா, உதவி ஆய்வாளர்கள் தியாகராஜன், பாலச்சந்தர் மற்றும் தலைமை காவலர் முரளி, பிரபாகரன், பாண்டியராஜன், முருகவேல் அடங்கிய சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
ரகசிய தகவலின் அடிப்படையில், அதிகாலை 4 மணி அளவில் மேல்மருவத்தூர் சித்தாமூர் சந்திப்பு அருகே வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், அவர்களிடம் தொன்மையான மீனாட்சி அம்மன் உலோக சிலை இருந்ததை மீட்டனர். தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அந்த சிலையை ஏழு பேர் கொண்ட கும்பல் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு விற்க முயற்சி மேற்கொண்டதும் தெரியவந்தது. மேலும் பொய்கையாற்றில் மணலில் மற்றொரு சிலை புதைத்து வைத்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அங்கு சென்று, தொன்மையான ரிஷப தேவர் சிலையை சிலை தடுப்பு பிரிவு காவல்துறையினர் மீட்டனர். இந்த தொன்மையான சிலைகளை விற்பனை செய்வதற்கு திட்டமிட்டுச் செயல்பட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கார்த்திக் (29 ), மூர்த்தி (33), சுந்தரமூர்த்தி (25), குமரன் (30), அசோக் (33), அறிவரசு (43), அப்துல் ரகுமான் (24) ஆகிய ஏழு பேரையும், கூடுதல் குற்றவியல் தலைமை நடுவர் நீதிமன்ற நீதிபதி பாண்டி மகாராஜா முன்பு ஆஜர்படுத்தினர். கைப்பற்றப்பட்ட இரண்டு சிலைகளையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu