வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள் கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு அலுவலகத்தில் வைப்பு
கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்ட சுவாமி சிலைகள்
அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் அருங்காட்சியங்களில் இருந்த, 10 உலோக மற்றும் கற்சிலைகள், டில்லியில் உள்ள மத்திய தொல்பொருள் துறை வசம், ஒப்படைக்கப்பட்டன. இப்படியாக மீட்கப்பட்ட தமிழக கோவில் சிலைகளை, தமிழக அரசிடம், கடந்த ஜூன் 1ம் தேதி டில்லியில், மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபுவிடம் ஒப்படைத்தார்.
இதையடுத்து, தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர்கள் ராஜராம், அசோக் நடராஜன் டில்லியில் இருந்து, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர்.
பின்னர், சாமி சிலைகள் தஞ்சாவூர், திருநெல்வேலி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கக்கூடிய கோவில்களுக்கு சொந்தமான சிலைகள் என கண்டறிப்பட்டுள்ளதால், 10 சிலைகளும் கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்து, பிறகு நீதிமன்றம் மூலமாக 10 சாமி சிலைகளும் ஹிந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்காக, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனத்தில், கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது. தொடர்ந்து ஜூன் 6ம் தேதி நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட சிலைகளின் விவரங்கள்: இரண்டு துவார பாலகர்சிலைகள், அத்தாள மூன்றீஸ்வரமுடையார் கோவில், தென்காசி மாவட்டம்.
நடராஜர் சிலை, கைலாசநாதர் கோவில், புன்னைநல்லுார், தஞ்சை மாவட்டம். கங்காளமூர்த்தி, நந்திகேஸ்வரர் சிலைகள், நரசிங்கநாதர் கோவில், ஆழ்வார்குறிச்சி, நெல்லை மாவட்டம். விஷ்ணு, ஸ்ரீதேவி சிலைகள், வரதராஜர் பெருமாள் கோவில், சுத்தமல்லி கிராமம், அரியலுார் மாவட்டம். சிவன் பார்வதி, வான்மீகிநாதர் கோவில், தீபாம்பாள்புரம், தஞ்சாவூர் மாவட்டம். குழந்தை சம்பந்தர் சிலை, சாயவனேஸ்வரர் கோவில், நாகப்பட்டினம் மாவட்டம். நடனமிடும் குழந்தை சம்பந்தர் சிலை, தமிழ்நாட்டைச் சேர்ந்தது (கோவில் பெயர் அறியப்படவில்லை).
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu