'பொய் பேசி ஆட்சிக்கு வந்தவர் ஸ்டாலின்'- எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு

கும்பகோணத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
கும்பகோணத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சார கூட்டம் கழக துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை வடக்கு தெற்கு மாவட்ட கழக செயலாளருமான வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்றது. கும்பகோணம் நகர அ.தி.மு.க. செயலாளர் ராமநாதன் வரவேற்றார்.
முன்னாள் மாவட்ட கழக பொருளாளர் ராம்குமார், எம்.பி. பாரதிமோகன், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி, ஒன்றிய செயலாளர்கள் அறிவழகன், செந்தில், அசோக்குமார், கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர பேசும்போது முதல் முறையாக நடைபெறும் கும்பகோணம் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்று மேயராக பதவி ஏற்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் முறைகேடு செய்து வெற்றி பெற வேண்டுமென தி.மு.க.வினர் திட்டம் போட்டு வருகின்றனர். அதை அ.தி.மு.க.வினர் முறியடிக்க வேண்டும். தேர்தலில் முறையாக சந்தித்து தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்பது ஒரு போதும் கிடையாது. ஜனநாயக முறைப்படி நடைபெறும் தேர்தலில் யாருக்கு செல்வாக்கு இருக்கும் என்பதை மக்கள் உணர்ந்து வருகின்றனர். அ.தி.மு.க.வினர் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற வேண்டும்.
தி.மு.க. தேர்தலில் முறைகேடு செய்யும் என்று நீதிமன்றத்தில் எடுத்துரைத்து தி.மு.க. தில்லுமுல்லு செய்வதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தமிழகத்தை ஆளும் மு.க. ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது போல் இதுவரை நிறைவேற்றி இருக்காரா? ஆட்சிக்கு வந்தவுடன் இல்லத்தரசிகளுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறியவர் தற்போது மனு அளித்து வீடுவீடாக ஏமாற்றி வருகிறார். மாதந்தோறும் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் மற்றும் கல்வி கடன் என எதுவும் தள்ளுபடி செய்யவில்லை.
இந்தியாவில் 25 மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை குறைத்து உள்ளார்கள். ஆனால் தமிழகத்தில் ரூ.3 மட்டும் குறைத்து விட்டு தற்போது விலைவாசி உயர்வு ஏற்பட்டு வருகிறது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் தேசிய வங்கியில் ஐந்து பவுனுக்கு குறைவாக வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்யவில்லை. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகையை அடமானம் வைத்து செலவு செய்தார்கள். தற்போது தகுதியானவர்கள் மட்டும் என்கிறார்கள். அ.தி.மு.க. பொய் பேசுகிறதா? தி.மு.க. பொய் பேசுகிறதா? பொய்யெல்லாம் பேசி ஆட்சியை பிடித்தவர்கள் தான் திமுகவினர்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை கடன் 48 லட்சம் பேரில் 13 லட்சம் பேர்தான் தகுதியானவர்கள் என்று கூறி வருகின்றனர். கூட்டுறவு நகை கடனில் 35 லட்சம் பேரும் வட்டி கட்டுவார்கள். அதை 13 லட்சம் பேருக்கு மீட்டு கொடுப்பார்கள். விஞ்ஞான மூளை படைத்தவர் தான் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் ஆட்சி செய்யும் தி.மு.க. அரசு சர்வாதிகார அரசாக மாறி வருகிறது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu