ஆற்றில் தத்தளித்த 2 சிறுவர்களை மீட்ட வீர தாய்க்கு பாராட்டு சான்றிதழ்

வீர தாய் சரோாஜாவிற்கு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டம், அலவந்திபுரம், நடுத்தெருவைச் சேர்ந்தவர் சந்தானம் மனைவி சரோஜா(வயது 60.) இவர் கடந்த 13ம் தேதி கங்காதாராபுரம் காவிரி ஆற்று பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த ராகுல்,( 14, )மோகன்ராஜ்,( 13 )அஸ்வத்,( 14, )ஆகிய மூன்று சிறுவர்கள், காவிரி ஆற்றில் குளித்தனர்.அப்போது ஆழமான பகுதியில் சிக்கி கூச்சலிட்டனர்.
இதைக்கேட்டு, அங்கு சென்ற சரோஜா தான் கட்டியிருந்த புடவையை அவிழ்த்து ஆற்றில் வீசி, மோகன்ராஜ், அஸ்வத் ஆகிய இருவரையும் கரை சேர்த்தார். ராகுல் ஆற்றில் மூழ்கி, 14ம் தேதி இறந்த நிலையில் மீட்கப்பட்டான்.இது குறித்து தகவலறிந்த மத்திய மண்டல ஐ.ஜி., பாலகிருஷ்ணன், ஜன. 17ம் தேதி மூதாட்டி சரோஜா, அவரது கணவர் சாந்தானம் ஆகியோரை தன் அலுவலகத்திற்கு வரவழைத்து பாராட்டி, வெகுமதி வழங்கினார்.
இந்நிலையில், தஞ்சாவூரில் நடந்த குடியரசு தின விழாவில், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சரோஜாவுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அவருக்கு உதவிய அதே பகுதியைச் சேர்ந்த கண்ணையனுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.மேலும், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ராஜாராம், ஏழை மாணவன் ஒருவரின் இதயமாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ததையும், தனது உடலை தஞ்சை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு தானமாக கொடுத்ததையும் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu