ரயில்நிலைய நடைமேடை: தஞ்சை கலெக்டருக்கு முன்னாள் எம்.பி. கோரிக்கை
பைல் படம்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு மயிலாடுதுறை தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்கே. பாரதிமோகன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: என்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலத்தில் கும்பகோணம் ரயில்வே நிலையத்தில் பயணிகள் வசதிக்காக இரண்டு மற்றும் மூன்றாம் நடைமேடைகள் 24 ரயில் பெட்டிகள் நிற்கும் வகையில் நீட்டிப்பு செய்ய மத்திய ரயில்வே துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்து அதற்கான ஒப்புதலையும், நிதி ஒதுக்கீட்டையும் பெற்றுத் தந்தேன்.
அந்த பணிகள் நிறைவேற்ற கூடுதல் நிலம் ஆர்ஜிதம் செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகத்திடம் ரயில்வே துறை 2017ஆம் ஆண்டே கோரிக்கை அனுப்பியது. இருப்பினும் இதுநாள் வரை வருவாய் துறை நிலம் கையகப்படுத்தி ரயில்வே வசம் ஒப்படைக்கவில்லை என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
மேலும் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான பணி இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் ரயில்வே துறை அந்த நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்யவும் வாய்ப்புள்ளது. எனவே தாங்கள் இது தொடர்பாக நேரடியாக கண்காணித்து கும்பகோணம் ரயில்வே நிலையத்தில் நடைமேடை நீட்டிப்பு பணிகளுக்கு தேவையான நிலத்தை மேலும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக கையகப்படுத்தி இரயில்வே வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu