தென்னக ரெயில்வே பொது மேலாளர் கும்பகோணம் ரயில் நிலையத்தில் ஆய்வு

கும்பகோணம் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ரயில்வே பொது மேலாளரிடம் வியாபாரிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரிடம் குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு சார்பில் கூட்டமைப்பின் தலைவர் சோழா.சி. மகேந்திரன், செயலாளர் சத்யநாராயணன் ஆகியோர் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
கும்பகோணம் நகரம் மிகவும் பழமையான பாரம்பரியம் கலாச்சாரம் கொண்ட நகரமாகும். பழமையான கோவில்கள் சுற்றுலா தலங்கள் அமைந்துள்ள நகரமாகும். மேலும் கும்பகோணம் நகரம் பாரம்பரியமான பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. இத்தகைய பெருமை வாய்ந்த கும்பகோணம் நகரில் உள்ள ரெயில் நிலையத்தின் மேம்பாடு மற்றும் புதிய ரெயில் சேவைகள் அவசியமாகிறது. எனவே ஆய்வு பணிகள் முடிவடைந்து ரயில்வே வாரியத்தின் அமைச்சகத்தின் அனுமதிக்காக நிலுவையில் உள்ள கும்பகோணம்- ஜெயங்கொண்டம்- விருத்தாசலம் இணைப்பு நீடாமங்கலம் வரையிலான புதிய ரயில் பாதை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மிகவும் பழமையான விழுப்புரம் தஞ்சாவூர் மெயின் லைன் பாதையை இரட்டை பாதையாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். சென்னை செங்கோட்டைக்கு மெயின் லைன் பாதையில் தற்போது ரயில் சேவை இல்லாமல் உள்ளது. உடனடியாக இந்த மெயின் லைன் பாதை வழியாக சென்னை -செங்கோட்டை ரெயில் சேவையை தொடங்க வேண்டும். மயிலாடுதுறை- திண்டுக்கல்- பழனி -பொள்ளாச்சிக்கு தினசரி ரயில் சேவை இயக்க வேண்டும்.
தஞ்சாவூரில் இருந்து மும்பைக்கு ரயில் சேவை தொடங்க வேண்டும். ராமேஸ்வரம்- திருப்பதி ரயிலை தினசரி ரயிலாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மயிலாடுதுறை- திருநெல்வேலி தினசரி பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். மயிலாடுதுறை திருச்சி மைசூர் விரைவு வண்டியை மீண்டும் இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் கூறப்பட்டிருந்தன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu