திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் ராகு பெயர்ச்சி விழா
சிறப்பு அலங்காரத்தில் நாகநாதசாமி.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகு ஸ்தலமான நாகநாதசாமி கோவில் அமைந்து உள்ளது. பல்வேறு புராண சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் 1½ வருடங்களுக்கு ஒருமுறை ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி இடம் பெயரும் ராகு பெயர்ச்சி விழா நேற்று நடந்தது.
ராகுபகவான் நாகவல்லி, நாகக்கன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக இந்த தலத்தில் அருள்பாலிக்கிறார். நேற்று பிற்பகல் 3.13 மணிக்கு ராகுபகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
இதையொட்டி நேற்று முன்தினம் இருகால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 10.30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், பிற்பகல் 2.30 மணிக்கு கடம் புறப்பாடு, மகா அபிஷேகம், சிறப்பு பாலபிஷேகமும், 3.13 மணிக்கு ராகு பகவான் பெயர்ச்சி அடைந்ததும் தீபாராதனையும் நடந்தது.
பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்வதற்கு ஏதுவாக சிறப்பு வழிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ராகு பெயர்ச்சியை முன்னிட்டு இரண்டாம் கட்டமாக வருகிற 23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. 26-ம் தேதி(சனிக்கிழமை) மாலை 6 மணி அளவில் ராகு பகவானுக்கு சந்தனக்காப்பு அலங்காரம், சிறப்பு ஆராதனைகள், தயிர் பள்ளயம் தீபாராதனை நடக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu