கும்பகோணத்தில் 6 இடங்களில் போலீஸ் கண்காணிப்பு கூண்டுஅமைப்பு
கும்பகோணம் பிரதான சாலையில் அமைந்துள்ள போலீஸ் கண்காணிப்பு கூண்டு.
கும்பகோணம் நால் ரோடு முதல் கும்பேஸ்வரன் கோவில் மேலவீதி வரை சுமார் 4 கிமீ நகரத்தின் முக்கிய சாலையாகும். இந்த சாலை போக்குவரத்து நிறைந்த இடமாகும்.மேலும் இதேபகுதியில் அதிகளவில் ஜவுளி நிறுவனங்கள், நகைக்கடைகள், பாத்திரக்கடை உள்ளிட்ட முக்கிய கடைகள் மற்றும் கோவில்கள் உள்ளன. இதனால் இப்பகுதிக்கு தினமும் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
தஞ்சை மார்க்கத்தில் இருந்து நகரத்திற்குள் வரும் அனைத்து பஸ் போக்குவரத்துக்கும் இந்த சாலைதான் பயன்படுத்தப்படுகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து பயன்பாட்டால் இந்த சாலை எப்பொழுதும் பரபரப்பாகவும், போக்குவரத்து நெரிசலாக காணப்படும். போக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டம் மட்டுமின்றி இந்த சாலையின் இருபுறமும் இருசக்கரவாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் முக்கிய சாலை சந்திப்புகளில் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக நால்ரோடு, பழைய மீன்மார்க்கெட் சந்திப்பு, செல்வம் தியேட்டர் சந்திப்பு, ராமன் சந்திப்பு, டைமண்ட் தியேட்டர் சந்திப்பு, உச்சிப்பிள்ளையார் கோவில் சந்திப்பு ஆகிய 6 இடங்களில் போலீசார் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் புதிய உத்தியாக கூடுதல் போலீஸ் நியமிக்கப்பட்டு ரூ. 3 லட்சம் செலவில் பிரத்யேக கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது, கூண்டிற்குள் இருந்து கண்காணிப்பு கேமரா மூலம் போக்குவரத்தை சரி செய்யும் பணியை தொடங்கியுள்ளனர். கும்பகோணத்தின் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பாலக்கரை, தாசில்தார் அலுவலகம், தலைமை தபால் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து செல்வதால், இந்த பகுதியும் போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். எனவே இது போன்ற இடத்தில் மேலும் கண்காணிப்பு கூண்டு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu