கொரோனா தடுப்பூசி 100 % செலுத்திய ஊராட்சி: தமிழகத்தில் மூன்றாவது இடம்

கொரோனா தடுப்பூசி 100 %  செலுத்திய  ஊராட்சி: தமிழகத்தில் மூன்றாவது இடம்
X

சோழன்மாளிகை ஊராட்சி கிராம மக்கள் சார்பில் இன்று சுகாதாரப் பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது  

கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய சோழன்மாளிகை ஊராட்சியாக தேர்வாகியுள்ளது.

கும்பகோணம் அருகே கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் செலுத்திய ஊராட்சியாக சோழன்மாளிகை ஊராட்சியை சுகாதாரத்துறையினர் தேர்வு செய்து மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளனர். தமிழகத்தில் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் சோழன்மாளிகை ஊராட்சி உள்ளது. இங்கு 9 வார்டுகளில் 962 வீடுகள் உள்ளது. இதில் 18 வயதுக்கு மேல் 1,950 பேர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் செலுத்தப்பட்டு, 100 சதவீதம் பூர்த்தி அடைந்தது.

இதைத்தொடர்ந்து இன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சுகாதார பணியாளர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு, ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். விழாவில் பட்டீஸ்வரம் வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் பிரேமா, மருத்துவ அலுவலர் புனிதவதி மற்றும் சுகாதார பணியாளர்கள், ஊராட்சி மன்ற செயலர், ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து ஊராட்சிமன்றத் தலைவர் ஜெயக்குமார் கூறுகையில்: கொரோனா முதல் அலை வந்தபோது நாங்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடித்தோம். மேலும் தொடர்ந்து கொரோனா இரண்டாவது அலை வந்தபோது பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, வீட்டுக்கு வீடு சென்று மருத்துவப் பரிசோதனைகள் செய்தும், முகக்கவசங்களையும் வழங்கினோம், வாரம் இருமுறை ஊராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழி்ப்புணர்வு ஏற்படுத்தி கிராமத்தில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக சுகாதாரப் பணிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது என்றார்.

இதுகுறித்து, பட்டீஸ்வரம் அரசு வட்டார துணை மருத்துவமனை மருத்துவ அலுவலர் புனிதவதி கூறுகையில், பட்டீஸ்வரம் மருத்துவமனைக்கு 11 ஊராட்சிகள் உள்ளது. இதில் கரோனா பாதிப்பு ஏற்பட்ட போது 38 பேர் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டதும், சோழன்மாளிகை ஊராட்சியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வந்தனர். அதன்படி, 18 வயது நிரம்பிய 1,950 பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஆக.4-ஆம் தேதி தொடங்கி ஆக.14 -ஆம் தேதி வரை வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் கோவிஷீல்டு, கோவாக்சின் போன்ற தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது இந்த ஊராட்சியில் 100 சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்டதை அடுத்து, இதன் விவரத்தை மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்துள்ளோம். தமிழக அளவில் இந்த ஊராட்சி மூன்றாவது ஊராட்சியாக 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட ஊராட்சியாக சுகாதாரத் துறையின் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது . அனைவரும் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட தையடுத்து இந்த கிராம மக்கள் சார்பில் இன்று, சுகாதாரப் பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது என்றார்.



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!