கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் : போராட்டக்குழு அரசு தலைமை கொறடாவிடம் மனு

கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய  மாவட்டம் : போராட்டக்குழு அரசு தலைமை கொறடாவிடம் மனு
X

கும்பகோணத்தை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க அரசு தலைமை கொறடாவிடம் மனு அளித்தனர்.

கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என்று போராட்டக்குழுவினர் அரசு தலைமை கொறடாவிடம் மனு அளித்தனர்.

சட்டமன்ற கூட்டத்தொடரில் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் போராட்டக்குழுவினர், அரசு தலைமை கொறாவிடம் மனு அளித்தனர்.

இது குறித்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ம.க.ஸ்டாலின் மற்றும் போராட்டக்குழுவினர்கள், தமிழக அரசு தலைமை கொறாடா கோவி செழியனிடம் அளித்துள்ள மனுவில்,

குடந்தை என்று அழைக்கப்பட்டு வந்த கும்பகோணம் ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாக விளங்கிய பெருமை உடையது. கும்பகோணம் கோயில்களின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. மாவட்டத் தலைநகரமாகத் திகழ்ந்ததற்கான சான்று 1860-ல் பத்திர பதிவேடுகளில் கும்பகோணம் ஜில்லா என்றே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் தஞ்சாவூர் தவிர்த்த எஞ்சிய டெல்டா பகுதிகளுக்கு மாவட்டத் தலைநகரமாகவும் கும்பகோணம் திகழ்ந்திருக்கிறது.

தென்னகத்து கேம்பிரிட்ஜ் என போற்றப்படும் பழமையான கலைக்கல்லூரி, அரசு கவின் கலைக்கல்லூரி கும்பகோணத்தில் தான் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 கோடிக்கு மேல் பக்தர்கள் புனித நீராடும் மகாமகத் திருவிழா கொண்டாடப்படுகிறது. கோயில் நகரம், சுற்றுலா நகரம், நவக்கிரக தலங்களுக்குரிய மைய நகரம், பாரம்பரிய நகரம், வர்த்தக நகரம், கலை அழகு மிக்க நகரம் என்றெல்லாம் கும்பகோணம் போற்றப்படுகிறது.

இதனால் தினமும் பல வெளிநாட்டினர் மற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து செல்கின்றனர். மிகப்பெரிய சுற்றுலா நகரமாகவும் அரசுக்கு வருவாய் ஈட்டித்தருகிறது. கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் இயங்கி வரும் சிட்டி யூனியன் வங்கி, கும்பகோணம் பரஸ்பர சகாயநிதி ஆகியவை செயல்படுகின்றன.

மேலும் அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகம், மாவட்ட அரசு மருத்துவமனை, மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், கல்வி மாவட்டம், மாவட்ட பதிவாளர் அலுவலகம், பி.எஸ்.என்.எல் தொலைத் தொடர்பு மாவட்டம், ஆடுதுறையில் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையிடம், குடந்தை மறை மாவட்டம், விசாலமான பேருந்துநிலையம், தூய்மையான விரிவுபடுத்தப்பட்ட ரயில்வே நிலையம், மிகப்பெரிய தாராசுரம் காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பல சிறப்புகளை உடையது.

பல தமிழ் அறிஞர்கள் பிறந்த ஊர் மட்டும் அல்லாது, பல வர்த்தகத்தின் முன்னோடி நகரமாகவும், கோயில்கள் நிறைந்த நகரமாகவும் திகழும் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளாக வலியுறுத்தப்படுகிறது.

மேலும் கடந்த 2020 ஆண்டு முதல் கும்பகோணம் மாவட்டம் வேண்டி மக்களின் போராட்டமே தீவிரமானது. அனைத்துக்கட்சிகள், அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்புகள், வழக்கறிஞர் சங்கம், சமூக அமைப்புகள், மற்றும் பொதுமக்கள் சார;பில் செல்போன்கள் மூலம் ஒளி எழுப்பி அரசை வலியுறுத்தும்; விதத்தில் தொடர் முழக்க போராட்டமும், இன்று வரை பல்வேறு வகைகளில் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

கடந்த ஆட்சியில் இருந்த அமைச்சர்கள், முதல்வர் என அனைவரிடம் கோரிக்கை வைத்தும் எந்த ஒரு பயனுமில்லை.மேலும் தாங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது கும்பகோணம் பகுதி மக்களின கருத்துக்களை கேட்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்தது எங்களை உற்சாகப்படுத்தியது.

எனவே, தாங்கள் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைப்பது தொடர்பாக வருகின்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழக முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். அருகில் எம்.பி ராமலிங்கம், எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன், போராட்டக்குழுவினர் குடந்தை அரசன், ஒன்றிய பொறுப்பாளர் ஜெயபால் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil