கும்பகோணம் ரயில் நிலையத்தில் முன்னாள் எம்.எல்.ஏ மகன் மர்ம மரணம்

கும்பகோணம் ரயில் நிலையத்தில் முன்னாள் எம்.எல்.ஏ  மகன் மர்ம மரணம்
X

கும்பகோணம் ரயில் நிலையத்தில் முன்னாள் எம்எல்ஏவின் மகன் மர்மமான முறையில் இறந்தார்.

கும்பகோணம் ரயில் நிலையத்தில் முன்னாள் எம்.எல்.ஏ பஞ்சவர்ணத்தின் மகன் மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுவை மாநிலம் கோட்டுச்சேரி முத்துசாமி பிள்ளை வீதியை சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவர் கோட்டுச்சேரி தொகுதி முன்னாள் திமுக எம்.எல்.ஏ ஆவார். இவரது மகன் வெற்றிச்செல்வன் (42) இவரது மனைவி ராஜேஸ்வரி இவர்களுக்கு ஹன்சிகா என்ற மகளும் உள்ளார்.

வெற்றிச்செல்வன் கடந்த சில நாட்களாக பல்வேறு பிரச்சனைகள் காரணமாக மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 21-ந் தேதி மாலை தனது சொந்த ஊரான கோட்டுச்சேரியில் இருந்து காரில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

வெற்றிச்செல்வன் வீடு திரும்பாததன் காரணமாக அவரது உறவினர்களும், நண்பர்களும் வெற்றிச்செல்வனை பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் நேற்று முன்தினம் கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் வெற்றிச்செல்வன் மனைவி ராஜேஸ்வரி தனது கணவரை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் கார் ஒன்று வெகுநேரமாகியும் ஒரே இடத்தில் நின்றதாகவும், காரின் அருகில் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்ததாகவும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அருகிலிருந்த ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு தகவல் தந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் சம்பவம் குறித்து விசாரணை செய்துள்ளார். விசாரணையில் காரின் அருகே இருந்த நபர் இறந்துவிட்டார் என தெரியவந்தது.

இதையடுத்து காரை ஆய்வு செய்த ரெயில்வே போலீஸார் காரின் உள்ளே இருந்த செல்போனை எடுத்து அதில் தொடர்புகொண்ட எண்களை விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் இறந்தவர் கோட்டுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ பஞ்சவர்ணத்தின் மகன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து சிவராமன் கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபிக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேற்கு போலீசார் வெற்றிச்செல்வன் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் கோட்டுச்சேரியை சேர்ந்த வெற்றிச்செல்வன் கும்பகோணம் வர காரணம் என்ன, அத்துடன் கும்பகோணம் ரயில் நிலையத்தில் ஏன் இறந்தார், அவரது இறப்புக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா, குடும்ப பிரச்சினையால் இறந்தாரா, வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!