மது குடிக்க சென்றவர் மர்ம மரணம் : திகிலடைய வைக்கும் சம்பவம்
மது குடிக்க சென்ற இருவரில், ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு மர்மமான முறையில் உயிரிழப்பு. மற்றொருவர் மனநலம் சரியில்லை என கூறி இரவோடு இரவாக மனநல மருத்துவமனையில் அனுமதி.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்தவர் வெங்கடேசன் (35), இவர் ஜீவி ஆர்கானிக் எனும் இயற்கை விவசாய இடுபொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் மண்டல அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் கம்பெனி பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் சந்திப்பு கூட்டம் கும்பகோணத்தில் இன்று நடைபெற இருந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெங்கடேஷன் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஊழியர்கள் நேற்று இரவு கும்பகோணம் வந்து தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தனர். இந்நிலையில் இவர்கள் கம்பெனியின் விற்பனையாளர்களில் ஒருவரான கும்பகோணம் அடுத்த ஆடுதுறை பகுதியைச் சேர்ந்த அன்பு என்பவருடன் சகஊழியர்கள் இரவு தனியார் ஏசி பாரில் மது அருந்தியுள்ளனர். பின்னர் அன்பு மற்றும் வெங்கடேஷன் இருவரும் மேலும் மதுஅருந்துவதற்காக வெளியில் சென்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வராததால் உடன் வந்த மற்ற அனைவரும் மீண்டும் தங்கள் தங்கும் விடுதிக்கு சென்று விட்டனர். இதையடுத்து இரவு மணி 9 அளவில் மற்றொரு சக ஊழியரான தூத்துக்குடியை சேர்ந்த ராஜாராம் என்பவரை அன்பு தொடர்பு கொண்டு, தான் இருக்கும் இடத்தின் லொகேஷனை அனுப்பியுள்ளதாகவும், மேலும் கையில் பணமில்லை உடனடியாக அந்த இடத்திற்கு மதுபாட்டில்களை வாங்கி வரும்படி கூறியுள்ளார். ஆனால் தனக்கு இந்த ஊர் புதிது. மேலும் தான் மது போதையில் இருப்பதால் தன்னால் வர முடியாது என வெங்கடேசனிடம் ராஜாராம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை வரை வெங்கடேசன் மற்றும் அவரை அழைத்துச் சென்ற அன்பு ஆகியோர் தங்கும் விடுதிக்கு வராததால் ராஜாராம், வெங்கடேசன் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பின்னர் அன்புவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து ராஜாராம் தன்னுடைய எண்ணிற்கு வெங்கடேசன் அனுப்பிய லொகேஷன் மூலம் தேடிச் சென்றபோது கும்பகோணம் அருகே மனஞ்சேரி காவிரி ஆற்றின் தடுப்பணை அருகே லொகேஷன் முடிவடைந்துள்ளது. பின்னர் அப்பகுதி முழுவதும் ராஜாராம் மற்றும் அவருடன் வந்த ஜான்ஸ்டீபன் ஆகியோர் வெங்கடேசனை தேடினர்.
அப்போது காவிரியாற்றில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வெங்கடேசன் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ராஜாராம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் தாலுகா போலீசார் ஆற்றில் மிதந்த வெங்கடேசன் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.
இந்த சம்பவம் குறித்து ராஜாராமிடம் விசாரணை செய்த தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் நேற்று இரவு ஆடுதுறையைச் சேர்ந்த அன்பு என்பவர் வெங்கடேசனை அழைத்துச் சென்றதாகவும் தற்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஆடுதுறை மேலமருத்துவக்குடியில் உள்ள அன்புவின் வீட்டிற்கு சென்றபோது அவரது வீடு பூட்டி இருப்பதை கண்டு அக்கம்பக்கத்தில் விசாரணை செய்த போலீசார் நேற்று இரவோடு இரவாக அன்பு தனது மனைவியுடன் தஞ்சையில் உள்ள தனியார் மனநிலை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளதாக கூறியுள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அன்பு சிகிச்சைக்காக சேர்ந்துள்ளதாக கூறப்படும் தஞ்சை தனியார் மனநிலை மருத்துவமனைக்கு சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
வெங்கடேசன் எதற்காக கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார், அன்பு ஏன் இரவோடு இரவாக, மனநிலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர வேண்டும் என்ற கேள்விகளுக்கு அன்புவிடம் நடத்தும் விசாரணையின் முடிவில் பதில்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
கும்பகோணத்தில் வாலிபர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு உடலை ஆற்றில் வீசிசென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu