எம்எல்ஏ ஈஸ்வரன் மன்னிப்பு கேட்க வேண்டும் : கும்பகோணத்தில் அர்ஜுன் சம்பத் பேட்டி

எம்எல்ஏ ஈஸ்வரன் மன்னிப்பு கேட்க வேண்டும் : கும்பகோணத்தில் அர்ஜுன் சம்பத் பேட்டி
X

திருச்செங்கோடு சட்டசபை தொகுதி எம்எல்ஏ ஈஸ்வரன் தெரிவித்துள்ள கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சி சார்பில் கும்பகோணத்தில் நடந்த கோலப்போட்டி 

எம்.எல்.ஏ ஈஸ்வரன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று செய்தியாளர்களுக்கு அர்ஜுன் சம்பத் பேட்டி அளித்துள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் வாசகம் இல்லாதது குறித்து திருச்செங்கோடு சட்டசபை தொகுதி எம்எல்ஏ ஈஸ்வரன் தெரிவித்துள்ள கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சி சார்பில் கும்பகோணத்தில் நகரம் முழுவதும் ஜெய் ஹிந்த் என்ற வாசகத்துடன் கூடிய கோலப்போட்டி நேற்று நடைபெற்றது.

இப்போட்டியில் நகரம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் திரளான பெண்கள் அவர்களின் வீட்டு முன்பாக கோலம் போட்டு தேசப்பற்றை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் குருமூர்த்தி தலைமை தாங்கினார். நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்துகொண்டு கோலம் போட்ட பெண்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

சட்டமன்ற கூட்டத்தொடரில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் திமுகவின் உதயசூரியன் கட்சியில் நின்று வெற்றி பெற்ற கொங்குநாடு கட்சியைச் சேர்ந்த ஈஸ்வரன் ஜெய்ஹிந்த் என்கிற வார்த்தை கவர்னர் உரையில் இடம்பெறவில்லை எனவே தமிழகம் தலைநிமிர்ந்து உள்ளது என கூறி ஜெய்ஹிந்த் என்ற வணக்கத்திற்கு தவறான விளக்கத்தை கொடுத்து பேசியுள்ளார்.

ஜெய்ஹிந்த் நூலகத்தை தேசிய ராணுவப் படையை உருவாக்கிய சுபாஷ் சந்திர போஸ், காங்கிரசார் போன்ற அனைவரும் மந்திரச்சொல் போல் உச்சரித்துள்ளனர். இந்த முடக்கத்திற்கு தவறான விளக்கத்தை கொடுத்துள்ள ஈஸ்வரன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

இதுகுறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் தனது கருத்தை தெரிவிக்க வேண்டும்.

கவர்னர் உரையில் மீண்டும் ஜெய்ஹிந்த் நூலகம் இடம் பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஜெய்ஹிந்த் முழக்கத்தை ஆதரிக்கும் இந்து மக்கள் கட்சி சார்பில் கும்பகோணம் பகுதியில் கோலப் போட்டி நடத்தப்பட்டுள்ளது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பாரதமாதா உடனான ஜெய்ஹிந்த் வாக்கியங்களை வரைந்து தங்களது தேசப்பற்றை வெளிப்படுத்தியுள்ளனர்.

பாஜக தலைமையும் வருகிற கூட்டத்தொடரில் கவர்னர் உரையில் நிச்சயம் ஜெய்ஹிந்த் முழக்கம் இடம்பெறும் என கூறியுள்ளனர். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் ஈஸ்வரன் கூறிய கருத்துக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ளனர்.அவர்களுக்கு எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை ஐஐடி கல்லூரியில் அம்பேத்கர், ஈவேரா வாசகர் வட்டம் என்கிற பெயரில் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு திராவிடர் கழகத்தால் தூண்டிவிடப்படும் இனவெறுப்பு கொள்கையை கடைபிடிக்கும் நக்சல் இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளை வேண்டுமென்றே எழுப்பி வருகின்றனர்.

ஒரு சில பேராசிரியர்களும் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. இது சம்பந்தமாக ஏற்கனவே இந்து மக்கள் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளது. சென்னை ஐஐடி கல்லூரியின் தனித்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும். அந்தக் கல்லூரிக்கு டாக்டர் அம்பேத்கர் பெயர் சூட்டப்பட வேண்டும் என்பது இந்து மக்கள் கட்சியின் கோரிக்கையாக இருந்து வருகிறது.இந்தியாவின் மதிப்பு வாய்ந்த ஒரு பல்கலைக்கழகத்தை சீர்குலைக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்கள் செயல்பட்டுக் கொண்டு உள்ளனர். அவர்கள் மீது கல்வி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதாக வாக்குறுதி அளித்தார். கருணாநிதி பிறந்த நாள் அன்று கையெழுத்து இடுவதாக கூறியிருந்தார். சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ 100 மானியம் வழங்குவதாக தெரிவித்திருந்தார். ஆனால், இவற்றில் எதையும் செய்யாமல், மோடியின் மீது பழி போட்டுவிட்டு நிர்வாக திறமை இல்லாமல் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

இதேபோல் தேர்தல் வாக்குறுதியில் திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற 100 நாட்களுக்குள் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிப்பதாக மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அவர் கொடுத்துள்ள வாக்குறுதியின்படி கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டத்தை விரைவாக அறிவிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.

ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் கொள்கையில் இருந்து பின் வாங்கவில்லை கட்சி தொடங்குவதில் இருந்து மட்டுமே பின் வாங்கி இருக்கிறார். இந்து மக்கள் கட்சி ஆன்மீக அரசியல் கொள்கைகளை முன்னெடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட அமைப்பாளர் விஜய் பிரபு ,நகர இளைஞரணி தலைவர் நாகராஜ், நகர அமைப்பாளர் அமரேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story