கும்பகோணம்: அனைத்துதொழில்வணிகர் சங்க கூட்டமைப்பினருடன் எம்எல்ஏ ஆலோசனை
கும்பகோணம் அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் கும்பகோணம் எம்எல்ஏ அலுவலகத்தில் நடைபெற்றது.
கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் தலைமையில் நடந்த கூட்டத்துக்கு நகராட்சி பொறியாளர் மணி , நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், நகரில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் மற்றும் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான கருத்துக்ளை வர்த்தக சங்க நிர்வாகிகளிடம் அன்பழகன் எம்எல்ஏ கேட்டறிந்தார்.நகரில் தற்போது சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. இதில் வியாபாரிகள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் பொது மக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் நலன் கருதி மழை மற்றும் வெயில் கால நிலையை கருத்தில் கொண்டுவணிக நிறுவனங்கள் தங்களது கடையின் முகப்பின் மேல் பகுதியில் தற்காலிகமாகவும் ,எளிதில் அகற்றக்கூடிய வகையிலும் மூன்று அடிக்கு நிழற்குடை அமைத்துகொள்ளலாம்.
கடையின் வாயில் முன்பு இரண்டு அடி அளவிற்கு அவ்வப்போது எடுத்து பொருத்திக்கொள்ளும் வகையில் தற்காலிகமாக உலோகத்தால் ஆன படிகட்டுகளை பயன்படுத்தலாம் உள்ளிட்ட சலுகைகள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி அன்பழகன் எம்எல்ஏ தெரிவித்தார்.
வழங்கப்பட்டுள்ள சலுகையை மீறி கடை உரிமையாளர்கள் சாலையை ஆக்கிரமிக்கும் வகையில் ஆக்கிரமிப்புகளை ஏற்படுத்தினால் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுப்பார்கள். அதில் தான் குறுக்கிட இயலாது என்பதையும் வர்த்தக சங்க நிர்வாகிகளிடம் தெளிவுபடுத்தினார் . மேலும் சாலையில் பொருட்களை அடுக்கி வைப்பது , கடைக்கு வெளியே வாசலில் சாலை போக்குவரத்திற்கு இடையூறாக பெயர் பலகை வைப்பது போன்ற செயல்களில் வியாபாரிகள் ஈடுபடக் கூடாது என கேட்டுக்கொண்டார்.
நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்து, ஒழுங்கு படுத்த உரிய ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணகுமாரிடம், அன்பழகன் எம்எல்ஏ தெரிவித்தார்.அதன்படி , போக்குவரத்து மாற்றங்கள், பலன்கள் போன்றவற்றின் அடிப்படையில், நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதில், வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் சோழாமகேந்திரன் , செயலாளர் சத்தியநாராயணன்,பொருளாளர் கியாசுதீன் , துணைச் செயலாளர்கள் வேதம்முரளி , கே.அண்ணாதுரை , மோட்டார் உதிரிபாகங்கள் விற்பனையாளர்கள் சங்க தலைவர் கண்ணன் , பட்டாசு விற்பனையாளர்கள் சங்க தலைவர் அசோகன் , நகை வியாபாரிகள் நல சங்க செயலாளர் சாருபாலா பாலாஜி , தமிழ்நாடு வர்த்தகர் நலக்கழக பிரதிநிதி எம்.இராமச்சந்திரன் , பித்தளைப்பாத்திர வியாபாரிகள் சங்க பிரதிநிதி ஆண்டாள் முரளி , ஹோட்டல்கள் சங்க பிரதிநிதி முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu