கும்பகோணத்தில் கோயில்கள் திறப்பு; பேருந்துகளும் இயங்க தொடங்கின

கும்பகோணத்தில் கோயில்கள் திறப்பு; பேருந்துகளும்  இயங்க தொடங்கின
X

சுவாமிமலை முருகன் கோவில்

கும்பகோணத்தில் இன்று முதல் கோயில்கள் திறப்பு. பேருந்துகளும் இயக்கம்

கும்பகோணம் பகுதியில் உள்ள சிவன் கோவில்கள் மற்றும் வைணவ கோவில்களில் கடந்த 80 நாட்களுக்கு பிறகு இன்று முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

மாநிலம் முழுவதும் தொற்று பரவல் அதிகரித்து வந்த நிலையில் தமிழக அரசு நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு கட்டுப்பாட்டை அமல்படுத்தியது. இதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 16-ம் தேதி முதல் கோவில்கள், மசூதிகள், சர்ச் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனையடுத்து கோவில்களில் தினமும் பக்தர்கள் அனுமதியின்றி தினசரி பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோவில் சக்கரபாணி கோவில், வராக பெருமாள் கோவில், ராமசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களும் மகாமகம் சிறப்பு பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில் ஆதி கம்பட்ட விஸ்வநாதர் கோவில், சுவாமி மலை முருகன் கோயில், பாபநாசம் 108 சிவாலயம், திருவிடைமருதூரில் உள்ள நவக்கிரக கோவில்கள் உள்ளிட்ட சிவன் , வைணவ கோயில்களும் இன்று முதல் திறக்கப்பட்டது.

இதனையொட்டி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தேவையான முன்னேற்பாடு பணிகளை அறநிலையத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவில் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணிகளை அறநிலையத் துறை பணியாளர்கள் மேற்கொண்டனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு உள்ளே மற்றும் வெளியே செல்வதற்கான வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது . கோவிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்யவேண்டும், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு அனுமதி இல்லை என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

இதேபோல் கொரோனா ஊரடங்கு தளர்வையடுத்து, இன்று காலை 6 மணி முதல் அனைத்து பஸ்களும் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இயக்கப்படும் பஸ்களில் வழக்கமான பராமரிப்பு வேலைகளை போக்குவரத்து கழக பணியாளர்கள் மேற்கொண்டனர்.

இதில் பஸ்கள் அனைத்தும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி கொண்டு தூய்மை செய்யும் பணி இன்று கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக தலைமையக பணிமனையில் நடைபெற்றது. கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இயங்குவதற்காக நகரப்பேருந்துகள் 210 உட்பட மொத்தம் 461 பஸ்கள் இயக்கப்பட்டன.

தமிழக அரசு அனைத்து வியாபார நிறுவனங்கள் ஜவுளி கடைகள் நகை கடைகள் உள்ளிட்ட நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்படலாம் என அறிவித்துள்ளதை தொடர்ந்து கும்பகோணம் பகுதியில் செயல்பட்டு வரும் பல்வேறு பெரிய சிறிய ஜவுளி கடைகள் நகை கடைகள் உள்ளிட்ட அனைத்து வியாபார நிறுவனங்களும் திறக்கப்பட்டது.

இதற்காக இந்த வியாபார நிறுவனங்களில் வேலை பார்த்து வந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். இதன்காரணமாக கும்பகோணத்தில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் வியாபாரம் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil