அனைத்து கோயில் அர்ச்சகர்களையும் நிரந்தர ஊழியர்களாக்க தமிழக அரசுக்கு கோரிக்கை
''கும்பகோணத்தில் அனைத்து கோயில் அர்ச்சகர்களையும் நிரந்தர ஊழியர்களாக்க வேண்டும்,'' என தமிழ்நாடு அர்ச்சகர் சமூகநல சங்க பொதுச் செயலாளர் பாலசடாட்சரம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அர்ச்சகர் சமூகநல சங்க பொதுச் செயலாளர் பாலசடாட்சரம் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம் வருமாறு:
தற்போதுள்ள சூழ்நிலையில் தங்களது கருணை சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் உள்ளிட்ட அனைத்து அர்ச்சகர்கள், ஆலய பணியாளர்கள் துன்பங்கள் தீர்க்கப்பட வேண்டும். தற்போதுள்ள அர்ச்சகர்கள், ஓதுவார்கள் உள்ளிட்ட ஆலய பணியாளர்களில் 95 சதவீதம் பேர் தினக்கூலிகளாகவும், தொகுப்பூதியம் பெறுபவர்களாகவுமே இருக்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாகவும், தந்தைக்கு பின் மகன் என்ற நிலையிலும் உரிய பயிற்சி பெற்று பணியில் உள்ளனர். இவர்களை மேற்படி அரசு சுற்றறிக்கையின்படி பணி நீக்கம் செய்தால் சுமார் 44 கோயில் பணியாளர்களில் 95 சதவீதம் பேர் பணியிழப்பார்கள். இதனால் அனைத்து ஆலயங்களின் பூஜை முதலிய பணிகள் நின்றுவிடும். அதோடு பணியாளர்களும் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். உலக நன்மைக்காக நடைபெறும் கோயில் பூஜைகளில் உள்ள குறைபாடுகளால்தான் இப்போது கொரோனா போன்ற தொற்றுகளால் தேசம் துன்பத்தில் உழன்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையரின் சுற்றறிக்கைபடி பணி நீக்கம் செய்தால் அனைத்து ஆலயங்களின் பூஜை முதலிய பணிகள் நின்றுவிடும். இறைபணி தடைபட்டால் அது தேச மக்களுக்கும், தேசத்திற்கும், அரசுக்கும், ஆள்வோருக்கும் தீமைகளை ஏற்படுத்தும்.
எனவே, துரித நடவடிக்கை எடுத்து அறநிலையத் துறை ஆணையரின் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். தற்போது ஆலயங்களில் பணியில் உள்ள அர்ச்சகர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களையும் நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும். அவர்களின் பணி காலத்திற்குரிய ஊதிய உயர்வும், உரிய அரசு அங்கீகாரமும் வழங்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில், தமிழ்நாடு அர்ச்சகர் சமூகநல சங்க பொதுச் செயலாளர் பாலசடாட்சரம் தெரிவித்துள்ளார்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu