திமுக அரசின் 100 நாள் ஆட்சியில் தோல்விதான் சாதனை இல்லை: அர்ஜுன்சம்பத்
கும்பகோணத்தில் பத்திரிக்கையாளகளுக்கு பேட்டியளித்த இந்து மக்கள் கட்சி மாநிலத்தலைவர் அர்ஜுன்சம்பத்
திமுக அரசு 100 நாட்கள் ஆட்சியில் எல்லாவித்திலும் தோல்வியை கண்டுள்ளது. இது சாதனை அல்ல. தமிழக மக்களுக்கு வேதனைதான், எனவே மு.க.ஸ்டாலின் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கும்பகோணத்தில் அர்ஜுன் சம்பத் பேட்டி அளித்தார்.
கும்பகோணத்தில் பத்திரிக்கையாளர்களிடம் மேலும் கூறியதாவது: தஞ்சை மாவட்டத்தின் கோவில் நகரமாக உள்ள கும்பகோணம் பகுதியில் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு, பக்தர்களின் மன உணர்வுகள் புண்படும் வகையிலும், இங்கே ஒரு பதற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடும், உரிமம் பெறாமல், உரிய அனுமதி பெறாமல், விதிமுறைகளை மீறி, இங்கே மாட்டு இறைச்சி உணவுக்கடை அமைக்கப்படுவது என்பது மிகவும் கண்டனத்துக்குரியது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை, காவல்துறை என அனைத்து தரப்பிடமும் புகார் செய்தும் அவர்கள் மாட்டு இறைச்சிக்கடையை தொடர்ந்து நடத்துவோம், வியாபாரம் செய்வோம் என்று அறிவித்தார்கள். கோவில்கள் நிறைந்த இந்த பகுதியிலே பக்தர்கள் மனம் புண்படும் படியான இந்த காரியத்தை செய்கின்ற அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், குடந்தை நகரில் எந்த வித உரிமமும் பெறாமல் நகராட்சி அனுமதி பெறாமல் அவர்கள் இந்த இறைச்சி உணவகத்தை திறந்திருக்கிறார்கள். இதை கண்டித்து 108 பசுக்களுடன் அரசு அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த இந்து மக்கள் கட்சி திட்டமிட்டிருந்தது. நேற்று நடந்த அமைதி பேச்சுவார்த்தையில், கடை திறக்க அனுமதிப்பது குறித்து முடிவு தெரிவிக்க, கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதால், அதுவரை காத்திருந்து எங்கள் முடிவை அறிவிப்போம்.
இது தொடர்பாக, கட்சியின் இளைஞரணி மாநில செயலாளர் குருமூர்த்திக்கு, இஸ்லாமிய அடிப்படைவாத, மத அடிப்படைவாத இயக்கங்கள் மூலம், ஏராளமான தொலைபேசி கொலை மிரட்டல்கள், நாடு கடந்தும் வருகிறது. அவருக்குரிய பாதுகாப்பினை தமிழக அரசு வழங்கிட வேண்டும். திமுக அரசு, நூறு நாட்கள் ஆட்சியில் எல்லாவிதத்திலும் தோல்வியையே கண்டுள்ளது. இது சாதனை அல்ல, இதனால் தமிழக மக்களுக்கு வேதனையும், சோதனையும் தான். அதிமுக முக்கிய பிரமுகர்கள் வீட்டில் நடந்த வருமானவரி சோதனை உள்நோக்கம் கொண்டது. இது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.
திமுகவின், நூறு நாட்கள் ஆட்சியில் எல்லா விதத்திலும் தோல்வியே கண்டுள்ளது, குறிப்பாக கொரோனா தடுப்பு, கொரோனா உயிரிழப்பு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை, நிர்வாக கோளாறு, மின்தடை, மறைமுகமாக மின் கட்டண உயர்வு, விவசாயிகளின் நெற்பயிர் காப்பீடு ரத்து ஆகியவற்றை குறிப்பிடலாம் எனவே இதனை நூறு நாட்கள் சாதனை என குறிப்பிடமுடியாது, தமிழக மக்களின் வேதனை, சோதனை என்று வேண்டுமானால் குறிப்பிடலாம், எனவே, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில், இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சுமார் 43 ஆயிரம் திருக்கோயில்களில் சுமார் 35 ஆயிரம் திருக்கோயில்களில் ஏற்கனவே பல்வேறு சாதியினரும் அர்ச்சகராகவும், பூசாரிகளாகவும் உள்ளனர் தமிழக அரசு, வேண்டும் என்றே இதில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. பூசாரி, அர்ச்சகர் நியமனத்தில் அரசு தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார். பேட்டியின் போது இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொது செயலாளர் குருமூர்த்தி, அகிலபாரத ஆன்மீகப்பேரவை இளைஞர் அணி பொது செயலாளர் கண்ணன், சிவசேனா தஞ்சை மாவட்டப்பொது செயலாளர் குட்டிசிவக்குமார், மாநில துணை தலைவர் புழவஞ்சி போஸ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu