விநாயகர் சதுர்த்தி விழா: இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா அமைப்பினர் நூதன போராட்டம்

இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா அமைப்பினர் கும்பகோணத்தில் நூதன போராட்டம்
செப்டம்பர் 10-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கும்பகோணம் கோட்டாட்சியரிடம் மனு அளிக்க ஊர்வலமாகச் சென்ற இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா அமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அந்த அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நாடு முழுவதும் அடுத்த மாதம் செப்டம்பர் 10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் கடந்த கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் வழிபாடு நடத்தவும் தடை விதித்து அவரவர் வீடுகளிலேயே வழிபாடு செய்ய அறிவுறுத்தியது. இந்த நிலையில் இந்த வருடம் செப்டம்பர் மாதம் 10-ந் தேதி கொண்டாடப்படவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா அமைப்பின் சார்பில் மாநில செயலாளர் பாலா தலைமையில், விநாயகர் வேடமணிந்து கும்பகோணம் கோட்டாட்சியரிடம் மனு அளிக்க ஊர்வலமாக சென்றனர்.
இந்த அமைப்பினரை கும்பகோணம் கோர்ட் ரவுண்டானா அருகே போலீசார் தடுத்து நிறுத்தியதால் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா அமைப்பினர் போலீசாரை கண்டித்து அந்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மாநில செயலாளர் பாலா நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகின்ற செப்டம்பர் 10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவதற்கு இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றோம் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா இறுதி கட்டத்தில் தமிழக அரசு விநாயகர் சிலைகள் வைப்பதற்கு அனுமதி இல்லை என்று கூறி அவரவர் வீடுகளில் சுவாமியை வைத்து வழிபடலாம் என்ற அறிவிப்பு வெளியிட்டது. இதனால் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்வதற்காக தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலை செய்த கைவினைக் கலைஞர்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டு இதுவரை தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழா குறித்து உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்கவில்லை. இதனால் விநாயகர் சிலை செய்பவர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். இந்து அமைப்புகளும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடக்குமா நடக்காதா என்ற அச்சத்திலேயே இருந்து கொண்டிருக்கின்றோம்.
எனவே தமிழக அரசு உடனடியாக விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்கவேண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கு உரிய அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்-அமைச்சருக்கு கோட்டாட்சியர் வாயிலாக மனு அளிக்க ஊர்வலமாக வந்தபோது போலீசார் எங்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். நேற்று (அதாவது நேற்று முன்தினம்) இரவு கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு எதிர்ப்புறம் உள்ள கிறிஸ்தவ அந்தோணியர் தேவாலயத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு வந்து தேர்பவனி நிகழ்ச்சியில் ஈடுபட்டார்கள். இந்த ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி அளித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். எங்களது ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை என்று சொல்லி இங்கேயே தடுத்திருக்கிறார்கள். இந்த மதச்சார்பற்ற நாட்டில் போலீசார் மதத்திற்கு ஒரு சட்டம் போடுகிறார்கள். போலீசாரின் இந்த பாரபட்சமான செயல்பாட்டைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் கோஷங்கள் எழுப்பி இருக்கிறோம். தொடர்ந்து எங்களது கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் ஒப்படைக்க காத்திருக்கிறோம்.
தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு உரிய அனுமதி அளிக்கவில்லை என்றால் தடையை மீறி விநாயகர் சிலைகளை பொது இடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவதுடன் விநாயகர் ஊர்வலமும் நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா நகர தலைவர் பிரபாகரன், இளைஞரணி மாவட்ட செயலாளர் விஜய் , ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் வேல்முருகன், அகில இந்திய பசும்பொன் தேவர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி அளிக்கக்கோரியும் மற்றும் போலீஸ் துறையை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu