விநாயகர் சதுர்த்தியை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும், இந்து மக்கள் கட்சி கோரிக்கை

விநாயகர் சதுர்த்தியை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும், இந்து மக்கள் கட்சி கோரிக்கை
X

விநாயகர்

விநாயகர் சதுர்த்தி விழாவை அரசு விழாவாக அறிவித்து நடத்த வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி கோரிக்கை விடுத்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழாவை அரசு விழாவாக அறிவித்து நடத்த இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சி இளைஞரணி மாநில பொது செயலாளர் குருமூர்த்தி கும்பகோணம் கோட்டாட்சியரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

ஆண்டுதோறும் பல்வேறு இந்து இயக்கங்கள் மற்றும் ஆன்மீக அமைப்புகளின் சார்பில் வீடுகளிலும் தெருக்களிலும் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.

ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கவில்லை.

இந்த நிலையில் அடுத்த மாதம் செப்டம்பர் 10-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி கட்டுப்பாடுகளுடன் விழாவை சிறப்பாக கொண்டாட அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

எக்காரணம் கொண்டும் விழாவுக்கு அரசு தடை விதிக்கக் கூடாது. மேலும் விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர்.

அவர்களுக்கு தமிழக அரசு உடனடியாக தேவையான நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழா ஆன்மிக விழா மட்டுமல்லாமல் ஆண்டுதோறும் சாதி பேதமின்றி இந்து சமயத்தினர் ஒற்றுமையாக கொண்டாடும் விழாவாக இருந்து வருகிறது.

எனவே நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை அரசு விழாவாக நடத்திட நடக்க உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டமன்றத்தில் அறிவித்து தமிழக முதலமைச்சர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட அரசு உத்தரவிட வேண்டும்.

மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தவும் அனைத்து இந்து கூட்டமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!