செண்டி பூ விலை இறங்குமுகம்: விவசாயிகள் சோகம்

செண்டி பூ விலை இறங்குமுகம்: விவசாயிகள் சோகம்
X
செண்டி பூக்கள் விலை கடுமையாக வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டத்தில், நெல்லுக்கு அடுத்தபடியாக கரும்பு, வாழை, வெற்றிலை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதுதவிர பூக்கள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகின்றன. மாவட்டத்தில் மல்லிகை, முல்லை, கனகாம்பரம். செண்டி பூக்கள், ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

இங்கு சாகுபடி செய்யப்படும் பூக்கள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு மார்க்கெட்டுகளுக்கும், திருவாரூர், மன்னார்குடி, வேளாங்கண்ணி போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுவது வழக்கம். இதில் மல்லிகை. முல்லை, கனகாம்பரம் பூக்கள் காலை நேரத்தில் அறுவடை செய்யப்படும்.

செண்டி பூக்கள் மாலை நேரத்தில் அறுவடை செய்யப்பட்டு இரவு நேரங்களில் மார்க்கெட்டுக்கு அனுப்பப்பட்டு காலையில் விற்பனைக்கு வரும். குறிப்பாக சோழன் மாளிகை, ஆத்தாடி, திருக்கானூர்பட்டி, குருங்குளம், திருவையாறு, பாபநாசம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டு வருகின்றன.

செண்டி பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு 45 நாட்கள் முதல் 60 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகிவிடும். இதன் சாகுபடி காலம் 3 மாதம் ஆகும். இந்த பூக்கள் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யப்படும்.

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன.

எனவே, பூக்களின் தேவை குறைந்து அதன் விலை சரிந்து வருகிறது. குறிப்பாக செண்டி பூக்கள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ ரூ. 50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலை மாறி, தற்போது ரூ.10 முதல் ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர்.

செண்டி பூக்கள் சாகுபடி செய்த விவசாயி குருநாதன் கூறும்போது, ஊரடங்கால் கோவில்கள் பூட்டப்பட்டுள்ளன, திருவிழாக்கள் கிடையாது, திருமண நிகழ்ச்சிகள் இல்லை. இதனால் பூ வியாபாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பூ மார்க்கெட் பூட்டப்பட்டதால் அறுவடை செய்த பூக்களை விற்பனை செய்ய முடியவில்லை.

ஒரு ஏக்கருக்கு 50 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். ஆனால் போட்ட முதலீடை எடுக்க முடியாத சூழல் உள்ளது. பூக்களை பறிக்காமல் விட்டால் செடியிலேயே அழுகிவிடும். தமிழக அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறினார்.

Tags

Next Story