கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆர்ப்பாட்டம்
கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்.
கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஏராளமான விவசாயிகள் காலி உர சாக்குகளை தலையில் கவிழ்த்துக் கொண்டும், கண்களை கருப்புத்துணியால் மூடியும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளுக்கு தேவையான பொட்டாஷ் மற்றும் டிஏபி உரங்கள் தமிழகம் முழுவதும் உள்ள 8,400க்கும் மேற்பட்ட வேளாண் கூட்டுறவு சங்கங்களில் போதுமான அளவு கையிருப்பு இல்லை. இந்நிலையை பயன்படுத்திக் கொண்டு கள்ளசந்தையில் உரங்களை பதுக்கி வைத்துக்கொண்டு தனியார் நிறுவனங்கள் ரூ.1040 மதிப்பிலான பொட்டாஷ் உரங்களை, ரூ.1700 வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
இது போன்று கள்ளச்சந்தையில் உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் மீது வேளாண்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். உர விலைகளை கட்டுப்படுத்திட ஒன்றிய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்வதுடன், தட்டுப்பாடு இன்றி அனைத்து இடங்களிலும் விவசாயிகளுக்கு தேவையான உரங்களை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் தலையில் காலி உர சாக்குகைளை கவிழ்த்துக்கொண்டும், கண்களை கருப்பு துணியால் மூடியும் நூதனமுறையில், ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு சாமிநாதன் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை விமலநாதன் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார். தொடர்ந்து இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை கோட்டாட்சியர் லதாவிடம் விவசாயிகள் அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu