நெல் விற்ற பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்

நெல் விற்ற பணத்தை  கொள்ளையடித்த  மர்ம நபர்
X
தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயியை கீழே தள்ளி விட்டு பணத்தை மர்ம நபர் கொள்ளயடித்துச்சென்றார்.

நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்ற பணத்தை வீட்டுக்கு, கொண்டு சென்றபோது விவசாயியை கீழே தள்ளி விட்டு பணத்தை மர்ம நபர் கொள்ளயடித்துச்சென்றார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த சோழபுரம் நடுத் தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் விவசாயி. இவர் சோழபுரம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்ததில் அவரது வங்கிக் கணக்கில் ரூ.33 ஆயிரம் பணம் செலுத்தப்பட்டது.

அந்தப் பணத்தை இன்று காலை சோழபுரம் இக்பால் தெருவில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் இருந்து ரூ. 33 ஆயிரத்தை எடுத்து கொண்டு சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். கலியபெருமாள் பணம் கொண்டு செல்வதை அறிந்து அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர் ஒருவர் ஆட்கள் இல்லாத பகுதியில் கலியபெருமாளிடம் முகவரி கேட்பது போல் நடித்து அவரை கீழே தள்ளிவிட்டு அவரிடமிருந்த ரூ.33 ஆயிரம் பணப்பையை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமானார். இதுகுறித்து அங்கிருந்த குடியிருப்புவாசிகளிடம் கலியபெருமாள் கூறியுள்ளார் . இதையடுத்து அவரை சோழபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் சோழபுரம் கடை வீதியில் உள்ள சி.சி.டி‌வி கேமராவை போலீசார் ஆய்வு செய்ததில் விவசாயி கலியபெருமாளை பைக்கில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபரின் உருவம் பதிவாகியுள்ளது.

தற்போது அந்த மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி குற்றவாளியை தேடி வருகின்றனர். சோழபுரத்தில் விவசாயியிடம் மர்ம நபர் பட்டப்பகலில் பணத்தை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story